.
.

.

Latest Update

ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திர நாளில் அவதரித்தவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்


ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திர நாளில் அவதரித்தவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். பயங்கரமான கனவு, சித்தபிரமை, பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க சுதர்சனரை வழிபடலாம். சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பிய தை அளித்து காப்பாற்றுவார்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் வணங்குவது சிறப்பு. முடிந்தால் தினமும்,இயன்ற நிவேதனம் வைத்து வணங்கலாம். வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.

கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது. சக்ரத்தாழ்வார் அவதார தினமான இன்று சக்கரத்தாழ்வாரை வணங்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவோம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )