.
.

.

Latest Update

“இனிமே இப்படிதான்” திரை விமர்சனம்


Inimey-Ippadithaan-Movie-Stills“இனிமே இப்படிதான்” புதிய களம், நேர்த்தியான கதை, மனதை வசப்படும் திரை கதை, மனதை வருடும் கிளைமாக்ஸ், தனக்கு ஏத்த கதை ஹீரோக்கான முழு தகுதி என்று எல்லா விசயத்திலும் அசத்தி இருக்கும் சந்தானம் மொத்தத்தில் “இனிமே இப்படிதான்” செம…..

கதைக்கேற்ற ஹீரோக்களைத் தேர்ந்தெடுப்பது வெற்றிப்படத்துக்கான ஒரு வழி என்றால் ஹீரோவுக்கேற்ற கதையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு வழி. அந்த வழியில் சென்று தனக்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததில் வெற்றிப்படத்தின் முதல் படியில் ஏறியிருக்கிறார் சந்தானம்.
இன்னும் மூன்று மாதத்துக்குள் மகனுக்குத் திருமணம் செய்யவில்லை என்றால் காலம் முழுவதும் அவன் சாமியாராக அலைய வேண்டியதுதான் என்று சோதிடர் சொல்லிவிட, சந்தானத்தின் பெற்றோரான நரேன்-பிரகதி ஜோடி முழுமூச்சாகப் பெண் பார்க்கும் படலத்தில் இறங்க, பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்தால் வாழ்க்கை கசக்கும் என்று நண்பர் விடிவி கணேஷ் உசுப்பேற்றிவிட, காதலிக்க ஆரம்பிக்கிறார் சந்தானம்.
துரத்தித் துரத்திக் காதலித்த ஆஷ்னா ஜாவேரி, சந்தானத்தின் காதல் சவாரிக்கு ஒத்துவாராமல் போக, வீட்டில் பார்த்த அகிலா கிஷோருக்கு ‘ஆஜர்’ சொல்லி நிச்சயித்த நேரம், இன்ப அதிர்ச்சியாக ஆஷ்னா காதலுக்கு ‘ஓகே’ சொல்ல, ‘டபுள் கேம்’ ஆடும் சந்தானத்துக்குக் கடைசியில் யாருடன் திருமணம் நடந்தது என்பதுதான் களேபர லைன்.
ஹீரோ ஆனாலும் ஆனார், சந்தானத்துக்கு மெருகு ஏறிக்கொண்டே போகிறது. ஆனால், தன் ஏரியா காமெடிதான் என்று அவர் புரிந்து வைத்திருப்பதால், பிற ஹீரோக்களுடன் போட்டிக்குப் போகாமல் தனக்கு வருவதைக் கொண்ட படத்தில் நடித்துக்கொண்டிருப்பது யானை பலம். அதனால், சீரியஸான சீனைக் கூட காமேடியாகவும், காமெடியான சீனை சீரியஸாகவும் அவரால் எளிதில் மாற்றி ரசிக்க வைக்க முடிகிறது. இதே ரூட்டில் போனால் கே.பாக்யராஜின் இடத்தை இட்டு நிரப்பலாம் அவர்.
படம் முழுவதும் சந்தான (சாம்)ராஜ்யம்தான். வழக்கமாக ஹீரோ அவதாரம் எடுப்பவர்கள், தன்னைத் தவிர தன் படத்தில் யாரையும் ஸ்கோர் செய்ய விடமாட்டார்கள். ஆனால், இதில் அத்தனைபேரின் தனித் தன்மைக்கும் பங்கம் வராமல் பங்கு கொடுத்திருப்பதில் சந்தானத்தின் தன்னம்பிக்கையும், பெருந்தன்மையும் புரிகிறது.
சந்தானத்தின் தயவால் ஆஷ்னாவுக்கு இரண்டாவது படம். முதல் படத்தைவிட மெச்சூரிட்டி கூடி நிற்கும் ஆஷ்னா, கிளாமர் ஏரியாவிலும் கலக்கி ‘ஆஹா’ஷ்னா ஆகியிருக்கிறார். சந்தானத்துக்குப் பொருத்தமான ஜோடி என்று சொன்னால், அடுத்த படத்திலும் அவருக்கு நாயகியாகி விடுவாரோ என்று சொல்லாமல் விடுகிறோம்.
அகிலா கிஷோருக்குப் பாதிப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருக்கும் கேரக்டர். ஆனால், கிடைத்த கேப்பில் சின்னதாக ஸ்கோர் செய்துவிடுவதில் அவர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
விடிவி கணேஷின் டெய்லர் கேரக்டர், அவருக்கான ‘டெய்லர் மேட் கேரக்டர்’ எனலாம். அவரும், அவரது காதல் மனைவியும், சந்தானம் கலாய்ப்பது போலவே பழைய சொம்பில் புது சரக்கு..! கலாய்ப்பதற்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டதில் சந்தானமும் கிடைத்த இடத்திலெல்லாம் அவரை ஓட்டுகிறார்… – (நீ சும்மா பேசினாலே புரியாது… இதுல ஹஸ்கி வாய்ஸ் வேறயா..? சத்தமாவே பேசு..!)
எந்தப்பாத்திரமானாலும் அதில் தன்னை ஊற்றி நிரப்பிக்கொள்ளும் தம்பி ராமையாவுக்கு சந்தானத்திம் மாமா வேடம். வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதிலும், அதில் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொள்வதிலும் அவர் டாக்டரேட்டே வாங்கிவிடுகிறார். சந்தானத்தின் திருமணத்துக்குத் தடை ஏற்படுத்த குலதெய்வக் கோவிலுக்கு வந்து சாமியாட முற்பட, அங்கே சாமிவரவழைக்கும் சிங்க முத்து கோஷ்டியிடம் சிக்கி அலகு குத்திக்கொள்வது அட்டகாச காமெடி.
முரட்டுத் தனமாக வந்து பயமுறுத்தினாலும், பெப்ஸி விஜயன் போடும் ‘லுங்கி டான்ஸ் ஆட்டம்…’ எந்த சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும். ஒரே ஒரு சீனில் வந்தாலும் ‘மனோகர்’ வெடித்துச் சிரிக்க வைக்கிறார்.
சந்தானத்தின் அப்பாவாக நரேன் நடித்திருப்பது வாடிக்கைதான். ஆனால், அம்மாவாக சரண்யா பொண்வண்ணன் நடிக்க வேண்டிய வேடத்தில் பிரகதி வந்து பிரமாதப் படுத்தியிருக்கிறார். (வாய்ஸ் ஒரிஜினலா..?)
படம் முழுவதும் விரவிக் கிடப்பது சந்தானத்தின் வெடி ஜோக்குகள்தான். யாரையும்விட்டு வைக்காமல் கலாய்ப்பதில் அவரை ‘ஜூனியர் கவுண்டர்’ எனலாம். (கவுண்ட்டர் டயலாக் அடிப்பதிலும்தான்…)
சந்தானத்தின் தன்மை புரிந்து வசனங்களை எழுதி இயக்கியிருக்கும் ‘முருகானந்த்’ என்கிற முருகன் மற்றும் பிரேம் ஆனந்துக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. அந்த கிளைமாக்ஸ் திருப்பமும் அது தரும் நிறைவும் கதைக்கு வலு சேர்க்கிறது.
ஒளிப்பதிவு செய்திருக்கும் கோபி ஜெகதீஸ்வரனும், இசையமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதியும் சத்தமில்லாமல் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
இப்படி சின்ன டீமை வைத்து பிரமாண்டப் படமாக தந்திருக்கும் சந்தானம், தயாரிப்பாளராகவும் வெற்றியடைந்திருப்பதால், நம்மைச் சிரிக்க வைத்ததைப் போலவே அவரும் சிரித்துக் கொள்ளலாம்..!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles