.
.

.

Latest Update

“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!


“‘பேராண்மை உண்மையிலேயே சவாலான படம் தான்” ; அனுபவம் பகிர்கிறார் சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்

“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” ; ரகசியம் உடைக்கும் உதயகுமார்

“ரசிகர்கள் சத்தத்துடன் போட்டிபோட்டு வேலைசெய்ய வேண்டியுள்ளது” ; உதயகுமாரின் ‘சவுண்ட்’ அனுபவங்கள்..!

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.

சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி வடிவமைப்பு பணியில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.

உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலி வடிவமைப்பும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரரான பிரபல சவுண்ட் என்ஜினியர் டி.உதயகுமார் (‘ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம்) மீண்டும் ஒருமுறை சிறப்பு மகுடம் சூட்டப்பட்டுள்ளார். .

ஆம்., சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகளில் ‘பேராண்மை’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரபல சவுண்ட் என்ஜினியர் உதயகுமார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.

லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்தவர் விருது அறிவிப்பின் சந்தோஷ தருணங்களையும் தனது துறைகுறித்த தொழிநுட்ப விபரங்களையும் தனது அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்…

சவுண்ட் இஞ்சினீயரா எப்படி இந்த பீல்டுல நுழைந்தீர்கள்…?

95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2008 வரை ‘ஊமை விழிகள்’ உட்பட ஆபாவாணன் சாரோட எல்லாப் படங்களுக்கும் வேலை செஞ்ச தீபன் சட்டர்ஜிங்கிற லெஜண்ட்கிட்ட உதவியாளராக இருந்தேன். அவர்கிட்ட தொழிலைக் கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா வந்து படங்களுக்கு சவுண்ட் என்ஜினியரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி தனியா வந்ததுக்கப்புறம் 3 வது வருஷத்திலே பண்ணின படம் தான் ‘பேராண்மை’.

பேராண்மை மாதிரி படங்கள், நடிகர் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் உங்களை மாதிரி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சவாலா இருந்திருக்குமே..?

உண்மைதான்.. கடந்த பத்து வருஷத்துக்கும் மேல இந்த துறையில் இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய பண்ணியிருக்கேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட வைக்கும். அப்படி மெனக்கெட வைத்த படமான பேராண்மைக்காக எனக்கு விருது கிடைத்ததில் மிக மிக சந்தோசம்.. காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அந்தப்படத்துல எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒரு மரத்தை வெட்டுறப்போ கூட அதோட சவுண்ட் எப்படி இருக்கும்னு யூகிச்சுப் பண்ணினேன். கமர்ஷியலோ, யதார்த்தப் படமோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதுக்கேத்த மாதிரி வேலை செய்வேன்.

இப்போ இந்தப்படத்துக்காக சிறந்த சவுண்ட் இன்ஜீனியரா எனக்கு தமிழக அரசோட திரைப்பட விருது அறிவிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி விருதுகள் தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்கணும்கிற உத்வேகத்தையும் தருது” என்கிறார்.

ஒலி வடிவமைப்புக்காக நீங்க என்ன மாதிரி சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்..?

வேலை நேரம் தவிர மீதி நேரங்களில் பெரும்பாலும் சத்தத்தைப் பற்றி எப்போதுமே நான் யோசிச்சிக்கிட்டுருப்பேன். உதாரணமா பீச்சுக்குப் போனா அங்க அடிக்கிற காற்றோட சத்தம் எப்படி இருக்கு? எந்த அளவுல அடிக்குதுன்னு மனசுல போட்டு வெச்சுப்பேன். ஒரு ஜெனரேட்டர் சத்தத்தைக் கூட கூர்மையா கவனிப்பேன். எந்த இடத்துல இருந்தாலும் குண்டூசி சத்தமா இருந்தாக் கூட அதை காதுல வாங்கிக் கொள்வேன். அப்பதான் படங்களில் நாம அந்த சத்தங்களை முறையான ஒலி அளவுல கொடுக்க முடியும்..

என்று சொல்லும் உதயகுமார் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் என்றால் அதற்கான வேலை முறை நிறைய மாறும்.. அதற்கு ஸ்பெஷலாக வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்..

ஏன் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனம்..?

அதுக்கு காரணம் அவங்களோட ரசிகர்கள் தான்.., ஏன்னா இந்த மாதிரி முன்னணி ஹீரோக்களோட படங்களுக்கு முதல் ரெண்டு மூணு நாளைக்கு ரசிகர்கள் குவிஞ்சிருவாங்க. தியேட்டருக்குள்ள விசில் சத்தம், கூச்சல், கைதட்டல்ன்னு பட்டைய கிளப்புவாங்க. அந்த மாதிரி நேரத்துல திரையில பேசுற டயலாக்குகள் ரசிகர்கள் சத்தத்தை மீறி அவங்களுக்கு கேட்கணும்னு அதுக்காகவே சத்தத்தை அதிகமாக்கி வைப்பேன். ஆனா இந்த களேபரங்கள் குறைய ஆரம்பிச்ச சில நாட்கள்ல தியேட்டர் ஆபரேட்டரே அவங்களுக்கு தேவையான சத்தத்தை பிக்ஸ் பண்ணிக்குவாங்க..

எல்லா இடங்களுக்கும் ஒரே அளவிலான சப்தம் செட்டாகுமா..?

நிச்சயமா செட்டாகாது.. உதாரணத்துக்கு ‘விசாரணை’ படத்தை திரைப்பட விழாக்களுக்கு திரையிட அனுப்பும்போது அங்க உள்ள ஆடியன்ஸ், அங்க இருக்கிற தியேட்டர்களை மனசுல வச்சு ஒலியோட அளவை குறைச்சிருவேன்.. அதே படம் நமம ஊர் தியேட்டர்ல திரையிடும்போது சத்த அளவை கூட்டித்தான் ஆகணும்..

வெளிநாட்டு படங்களின் ஒலி வடிவமைப்பை தூண்டுதலாக எடுத்துக்கொள்கிறீர்களா..?

இல்லவே இல்லை.. ஆனால் அந்த மாதிரி சீக்வென்ஸ் அவங்க பண்ணிருப்பாங்க.. அதை போட்டுக்காட்டி இதை பேஸ் பண்ணி நாங்க பண்ணிருக்கோம் பாருங்களேன்னு ஒரு சில டைரக்டர்கள் சொல்வாங்க.. அந்த மாதிரி படங்கள்ல எப்படி ட்ரீட் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்பேன்.. ஆனா நம்ம ஊருக்குன்னு வரும்போது நம்ம ஊரோட தியேட்டர் சிஸ்டத்தை மனசுல வச்சுத்தான் பண்ணியாகணும்..

ஒலி வடிவமைப்பை பொறுத்தவரை பெரும்பாலான இயக்குனர்கள் என்ன எதிர்பார்த்து உங்களிடம் வருகிறார்கள்..?

இன்னைக்கும் என்னைத் தேடி வர்றவங்க ”விசாரணை” படத்துல ஹீரோவை போலீஸ் அடிக்கிற அந்த அடி மாதிரி சவுண்ட் கொடுங்களேன்னு கேட்பாங்க” என்று ஆச்சரியப்படுத்துபவர் சமீபத்தில் தான் சைமா விருதையும் கைப்பற்றி வந்திருக்கிறார்.

‘விவேகம்’ படம் பற்றி சொல்லுங்களேன்..?

‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு. அதுல சவுண்ட் விஷயங்களை கொண்டு வர்றது தான் ரொம்ப முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.

என்கிற உதயகுமாரின் கைவசம் தற்போது ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles