.
.

.

Latest Update

கன்னட மக்களிடம் வருத்தம் – பல்டியடித்த நடிகர் சத்யராஜ்..!


கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை ஒரு சிக்கலையெட்டியபோது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.

இதன் ஒரு பகுதியாக கர்நாடக திரைத்துறையினர் தமிழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் தமிழக சினிமா துறையினரும் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

தமிழக திரைத்துறையினர் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் முன்பாக பெரும் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி சென்னையில் சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகே தனியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இந்தப் போராட்டத்திலும் திரையுலகத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் கர்நாடக அரசை மிகக் கடுமையாக பேசினார்.

இதையடுத்து ரஜினியின் படமான ‘குசேலன்’ படம் ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் அப்போது சில கன்னட அமைப்புகள் “நடிகர் ரஜினி அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னட மக்களுக்கும், கன்னட தேசத்துக்கும் எதிர்ப்பாக பேசியிருப்பதால் ‘குசேலன்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்…” என்று குரல் கொடுத்தனர்.

இதையடுத்து நடிகர் ரஜினி அந்த ஆர்ப்பாட்டத்தில் தான் பேசிய சில வார்த்தைகளுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பேட்டியை வெளியிட்டார். இதன் பின்புதான் ‘குசேலன்’ படம் கர்நாடகாவில் வெளியானது.

இதேபோல் இப்போது சத்யராஜுக்கும் சோதனை ஏற்பட்டுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பாக காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான தமிழ்த் திரையுலக ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்துவதாகவும், இதனால் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது குறித்து இயக்குநர் ராஜமெளலி நேற்றைக்கு டிவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக நடிகர் சத்யராஜும் இன்றைக்கு ஒரு வீடியோ பேட்டியை வெளியிட்டிருக்கிறார்.இந்த பேட்டியில் 9 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த ஆர்ப்பாட்டத்தில் தான் பேசிய வார்த்தைகளுக்கு கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

நடிகர் சத்யராஜ் தனது வீடியோ பேச்சில் பேசியிருப்பது இதுதான் :

“கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக காவரி நதி நீர் பிரச்சினையின்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்களை நிறுத்தச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினார்கள். அதில் நானும் ஒருவன்.

அதன் எதிரொலியாக என்னுடைய கொடும்பாவிகள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டன. அதேவேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கர்நாடக திரைத்துறையினரும் ஆவேசமாகப் பேசினார்கள். அப்படி நான் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னுடன் 35 வருடங்களாக உதவியாளராக இருக்கும் திரு.சேகரின் தாய் மொழி கன்னடம்.

கடந்த சில வருடங்களில் ‘பாகுபலி-1’ முதற்கொண்டு நான் நடித்த 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்தப் பிரச்சினையும் எழவில்லை. சில கன்னட படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் என்னால் நடிக்க முடியவில்லை.

9 வருடங்களுக்கு முன்பாக நடந்த அந்தக் கண்டனக் கூட்டத்தில் நான் பேசிய அந்தப் பதிவில் யூடியூபில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் நான் எனது மனப்பூர்வமான மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ் இன உணர்வாளர்களுக்கும், தமிழ் இன மக்களுக்கும் என் நலம் விரும்புபவர்களும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.

‘பாகுபலி’ என்ற மிகப் பெரிய படத்தின் ஒரு சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனின் சிறிய செயலைப் பொறுத்து பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. அதேபோல் கர்நாடகாவில் ‘பாகுபலி பாகம்-2’ திரைப்படத்தை வாங்கி விநியோகம் செய்யவிருக்கும் விநியோகஸ்தர்களை பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்குள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது இன்றைக்கு இயக்குநர் ராஜமெளலி டிவிட்டர் மூலமாக கூறிய விளக்கத்தின் மூலமாக தெளிவாகத் தெரியும்.

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழ் இன மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி.. காவிரி நதி நீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி.. தமிழ் மக்களின் நலன் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகள் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை படத்தில் நடிக்க வைத்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரும் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தால், இந்த சின்ன நடிகன் சத்யராஜை தங்களது படங்களில் நடிக்க வைத்து நஷ்டமடைய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதும், இறப்பதும்தான் ஒரு தமிழனாக எனக்கு மகிழ்ச்சி.

எனது இந்த மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக் கொண்டு ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை திரையிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்த தமிழின மக்கள், தமிழின உணர்வாளர்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம், என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் ஏற்பட்ட இந்தத் தொல்லையைப் பொறுத்துக் கொண்ட ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் திரு.ராஜமெளலி, தயாரிப்பாளர்கள் மற்றும் படக் குழுவினருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles