.
.

.

Latest Update

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் – கவிஞர் வைரமுத்து



காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.

இதோ அந்தக் காதல் பாட்டு :

மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே

ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்

காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்

*

பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே

என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?

தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி

பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே

திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே

மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles