சபாஷ் சரியான போட்டி!!!
இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு.
இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது‘வானவில் வாழ்க்கை’’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம். ‘வானவில் வாழ்கை’ அத்தகைய ஒரு படம்தான். மொத்தம் 17 பாடல்கள் அமைந்துள்ள இப்படத்தை , இசையமைத்து இயக்குனராக அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.
“இரண்டு கல்லூரியின் இசைக்குழுக்கள் இடையே நடக்கும் போட்டித்தான் கதை. இசைக்குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களை பாடி நடித்திருக்கிறார்கள், ஆங்கிலத்தில் இவ்வகை படங்களை மியுசிக்கல் ஃபிலிம் என்பார்கள். கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியுசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டு இருந்தேன், கல்லூரி மாணவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார் ஜேம்ஸ் வசந்தன்.
“நடிப்பு, பாடல், இசைக்கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமைததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளோம். சிறு, குறு, பெரியது என கதைக்கொன்றிய 17 பாடல்களை இசையமைத்தும் இருக்கிறேன். நான் அறிமுகம் செய்யும் இந்த இளைய திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள். இப்படம் ஃபிப்ரவரி 13அன்று காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும் “ என்றார் ஜேம்ஸ் வசந்தன்.