.
.

.

Latest Update

’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ் 50 இசை நிகழ்ச்சி


பாசமிகு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு
உளம்கனிந்த வணக்கங்கள்,
தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.
திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது.
இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களை நிறைவு செய்து தனது இசைப்பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப் போற்றி கவுரவிக்க உள்ளனர்.

சங்கீத சாம்ராட் ஜேசுதாஸ்!
கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபல பாடகராகவும் மேடை நடிகராகவும் விளங்கியவர். மூத்த மகன் யேசுதாசுக்கு சிறு வயதிலேயே இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். கர்னாடக இசையின் அடிப்படையான விஷயங்களை தந்தையிடம் இருந்தே கற்றுக் கொண்ட யேசுதாஸ், பின்னர் குஞ்சன் வேலு ஆசான், பி.எக்ஸ்.ஜோசப், சிவராமன் நாயர், ராமகுட்டி பாகவதர், கே.ஆர்.குமாரசாமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், பல்லவி நரசிம்ம ஆச்சாரியா ஆகியோரிடன் இசை பயின்றார்.

கொச்சி, செயிண்ட் செபாஸ்டியன் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோதே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வென்றார். மாநில அளவிலான இளைஞர் விழாவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் முதல் பரிசு வென்றது, இவரது இசைத் திறனை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எர்ணாகுளத்தில் 1958ல் நடந்த கேரள கத்தோலிக்க இளைஞர் விழாவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொச்சின் அருகே திரிப்புனித்துராவில் உள்ள ஆர்.எல்.வி.மியூசிக் அகடமியில் சேர்ந்து கானபூஷனம் பாடப் பிரிவில் சேர்ந்து பயின்று, சிறந்த மாணவராக டபுள் புரமோஷனுடன் தேர்ச்சி பெற்றார். மேற்படிப்புக்காக, திருவனந்தபுரம் ஸ்ரீ சுவாதித் திருநாள் மியூசிக் அகடமியில் சேர்ந்தவர், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது.

1961ல் முதல் முறையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல கவிஞர் ஸ்ரீ நாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது (படம்: கால்பாடுகள்). அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து தரப்பினரையும் தனது கம்பீரமான இனிய குரலால் கவர்ந்திழுத்த யேசுதாஸ், கேரளா

மட்டுமில்லால் இந்தியா முழுவது பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக தனது முத்திரையைப் பதித்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை”
என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக “சோடிசி பாத்” அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி,
மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.

1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது.

1965ல் இந்தியா – சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார்.

தமது திரைவாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.
சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.
திரையிசையுடன்,கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார்.
சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். அரை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த கான கந்தர்வனின் இசைப் பணி இனிதே தொடர்கிறது.

விருதுகள் மற்றும் பட்டங்கள்

* கான கந்தர்வன் – 1968, கேரள மகாகவி ஸ்ரீ.ஜி.சங்கர குருப் வழங்கி கவுரவித்தார்.
* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான கேரள மாநில விருது – 1969 (24 முறை பெற்றுள்ளார். பல்வேறு மாநிலங்கள் சார்பாக மொத்தம் 45 முறை).
* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது – 1972, 1973, 1976, 1982, 1987, 1988, 1991.
* பத்மஸ்ரீ – 1975
* கலைமாமணி – 1986
* அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் – 1986
* லதா மங்கேஷ்கர் விருது – 1993
* தேசிய குடிமகன் விருது – 1994, அன்னை தெரசா வழங்கி கவுரவித்தார்.
* சங்கீத கலா சிகாமணி – 2002, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை.
*பத்மபூஷண் – 2002
* ரஞ்சனி சங்கீத கலா ரத்னா – 2002
* சப்தகிரி சங்கீத வித்வான்மணி – 2002, ஸ்ரீ தியாகராஜசுவாமிவாரி கோயில் அறக்கட்டளை, திருப்பதி.
* உடுப்பி ஆஸ்தான வித்வான் – 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் வித்யாதீஷ சுவாமிகள் வழங்கினார்.
* சுவாதி ரத்னம் விருது – 2002, சென்னை மலையாள கிளப்.
* சங்கீத கலா சுதாகரா – 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்.
* கொரம்பயில் அகமது ஹாஜி அறக்கட்டளை விருது – மத நல்லிணக்கத்தை பரப்பியதற்காக – 2003.
* ஜே.சி.டேனியல் விருது – 2003, மலையாள திரைப்பட பணியில் வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக, கேரள அரசு வழங்கி கவுரவித்தது.
* குட்டிகுரா கேலோபோல் விருது – 2004, வனிதா இதழ் சார்பில் வழங்கப்பட்டது.
* வாழ்நாள் சாதனையாளர் விருது – 2004, பிலிம்பேர் சார்பில், நேரு ஸ்டேடியம் – சென்னை.
* விஸ்டம் சர்வதேச விருது – 2005
* வாழ்நாள் சாதனையாளர் விருது – 2005, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வட இந்திய திரைத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
* சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது – 2006.
* உதயஷங்கர் நினைவு பிலிம் விருது – 2006, கன்னட சித்ரா சாகித்ய ரத்னா ஸ்ரீ உதயஷங்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
* கவுரவ உறுப்பினர் அந்தஸ்து – 2008, வான்கூவர் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா, கனடா.
* பிலிம்பேர் விருது – 2009
* மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் – 2009.
* கேரள சங்கீத நாடக அகடமி விருது – 2010.
* சிஎன்என் ஐபிஎன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது – 2011, டெல்லி.
* பெப்கா அம்ரிதா பிலிம் விருது – 2011
* ஹரிவராசனம் விருது – 2012, சபரிமலை சந்நிதானம்.
* லிம்கா சர்வதேச விருது – 2012, ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு.

குறிப்பு:

6 மணி நேரத்துக்கும் மேலாகப் பொழியவுள்ள இசை மழையில், திரு.யேசுதாஸ் அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் நம்மையெல்லாம் நனைத்து மூழ்கடிக்கக் காத்திருக்கின்றன. சங்கீத சங்கமமாய் அமையும் இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப்பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்க உள்ளனர்.

தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்த இசை விழா, இந்த 2015-ம் வருடம் ஜனவரி 10ம் தேதி அன்று 75வது பிறந்தநாள் காணும் திரு.யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டமாகவும் அமைய பெறுவதில் பெருமை கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது. நுழைவுச்சீட்டுகள் கண்கவர் விதமாகவும், புதுமையாகவும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி /எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அனைத்து கிளைகள்.

மேலும் விவரங்களுக்கு: 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778.

இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ள்து
: www.lakshmansruthi.com, www.ticketnew.com, www.bookmyshow.com, www.madrasevents.in, www.indianstage.in , www.meraevents.com, www.eventjini.com

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles