தென்னிந்திய திரையுலகில் முதல் டிஜிட்டல் வெற்றிப் படமான ‘சிலந்தி’ படத்தை இயக்கி டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட இயக்குனர் ஆதிராஜன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்து எழுதி இயக்கி வரும், ஸ்டைலிஷான த்ரில்லர் படம் “அதர்வணம்” கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், ஆகியோரின் மைத்துனரும், 38 படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவரும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவருமான விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 28 படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ஹரிப்பிரியா, இதில் மாறுபட்ட வேடத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கியுள்ளார். ஒரு குத்துப் பாடலுக்கு முன்னாள் நாயகி மேக்னா நாயுடு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.
ஹரிப்பிரியா நீச்சல் குளத்தில் குளித்து விளையாடுவது போன்ற ஒரு காட்சி சமீபத்தில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. மாலை 6மணி முதல் அதிகாலை 6 மணி வரை நடைப்பெற்ற படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் கடும் குளிரில் நீச்சல் உடையில் தண்ணீரில் மிதந்து நடித்துக் கொண்டிருந்த ஹரிப்பிரியா திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். மூச்சுத்திணறி தத்தளித்தார். விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் தண்ணீரில் குதித்து ஹரிப்பிரியாவை காப்பாற்றினர். பதட்டம் அடைந்த ஹரிப்பிரியாவின் அம்மா இயக்குனரிடம் கடும்வாக்குவாதம் செய்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஹரிப்பிரியா, “தொடர்ந்து நீந்தியதாலும், கண்விழித்ததாலும் ஏற்பட்ட களைப்பினால் தான் தம் கட்ட முடியாமல் மூழ்கிவிட்டேன். இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இரண்டு முறை ரத்தக்காயம் கூட ஏற்பட்டு விட்டது. என் உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று கூறி அம்மாவை சமாதானப்படுத்தியதுடன், மீண்டும் தண்ணீரில் நீந்தி மீதி காட்சியிலும் நடித்துக் கொடுத்தார்.
விறுவிறுப்பான திரைக்கதையுடன் சென்னை, பெங்களூர், மைசூர், கோவா, பகுதிகளில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அதர்வணம் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட்புரடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. எம்.கார்த்திக் இசையில், ராஜேஷ் கே.நாராயணன் ஒளிப்பதிவில், வி.ஜே.சாபுஜோசப்-ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப்படத்தின் பாடல்கள் நா.முத்துக்குமார், சினேகன், நெல்லைபாரதி, ஆதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ‘தாரைதப்பட்டை’ புகழ் ஐ.ராதிகா, கலைக்குமார் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.