நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் கபிலன்வைரமுத்து ஆற்றிய உரையின் சுருக்கம் கீழ் வருமாறு:
”தகவல்யுகத்தின் மிகப்பெரிய சவால் உண்மைத் தகவலை அறிவது. சொல்லப்படுகிற செய்திகளில் இருந்து சொல்லப்படாத செய்திகளை புரிந்துகொள்ள ஒரு பகுத்தறிவு வலிமை தேவைப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்களும் வணிக அரசியலும் நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து விழுந்து எழுந்து ஓடுகிறோம். என்றாவது ஒருநாள் எழ முடியாத அளவிற்கு ஒரு பெரும் பள்ளம் தோண்டப்படுவதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய வளர்ச்சி தத்துவமும் நகரமயமாதலும் தனி மனித முன்னேற்றத்தை மையப்படுத்துகிறதா அல்லது அதிநவீன முதலாளித்துவத்தை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. 1947க்கு முன் இருந்ததைவிட இப்பொழுதுதான் நாம் இன்னும் விசுவாசமான அடிமைகளாக இருக்கிறோம் என்று தோன்றுகிறது. எங்கே எதைத் தொடங்கவேண்டும் என்று சதா அலைபாய்வது மேற்கத்திய வளர்ச்சி தத்துவம். எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற தெளிவுதான் இந்திய தத்துவம். அந்தத் தெளிவை நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. வெள்ளம் என்ற வலியில் இருந்து மனிதநேயம் என்ற வலிமை பிறந்தது போல், இன்றைய நம் வலிகள் நாளைய மாற்றமாக மலரும் என்று நம்புவோம்”
இவ்வாறு கபிலன்வைரமுத்து பேசினார். ரோட்டரி சங்கத் தலைவர் திரு. குணசேகரன், விழா தலைவர் மணிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக காலை நடந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.கற்பகவிநாயகம் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி சிறப்புரையாற்றினர். தஞ்சை தொழிலதிபர் திரு.ஆசிஃப் அலி, திரு.செழியன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.