’’சாய்ஹரிகிரியேஷன்ஸ்’’
வழங்கும்
“அப்பா… வேணாம்ப்பா…‘’
நல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் கதை தான் ’’அப்பா..வேணாம்ப்பா‘’. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே அவரிடம் இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி காலை எழுந்தவுடனேயே குடித்தே ஆக வேண்டும் என்ற மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
அந்த குடிப்பழக்கம் அவருடைய மானம், மரியாதை, வேலை, சொந்தம், நட்பு என எல்லாவற்றையும் இழக்க வைக்கிறது. அதற்குப் பின்னும் கூட அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. அவரால் ஏற்பட்ட தாங்க முடியாத பிரச்னைகளின் காரணமாக அவருடைய மனைவி, குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிகிறார். அதுவரை இருந்து வந்த மனைவியின் ஆதரவும் போன பின் பிச்சைக்காரன் போல் வாழ்கிறார். அப்பொழுதும் குடியை அவரால் நிறுத்த முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் உள்ள குடிகாரர்களுக்கான மருத்துவ சிகிச்சையிலும் சேர்கிறார். அந்த நிலையிலும் மனைவி அவரை காண வரவில்லை.
அங்கு தான் வாழ்க்கையில் முதன் முதலாக தான் ’’குடிநோயாளி’’ என்பதை உணர்கிறார். சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போல் கட்டுப்படுத்த முடியாத குடியும் ஒரு நோய் என்பதை உணர்கிறார். சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பின் வித்தியாசமான மனிதனாக வெளிவரும் சேகரை மனைவி உட்பட சமுதாயமே குடிகாரனாகத் தான் பார்க்கிறது. வேலை இல்லாமலும் , தங்க இடமில்லாமலும் துன்பப் பட்ட அவர் குடிநோயாளிகளின் உதவியால் வாழ்க்கையை தெரிந்து கொள்கிறார்.
மீண்டும் அவமானப்பட்டு மறுபடி குடிக்கிறார். ஆனால் இந்த முறை அதைத் தொடராமல் ’’தான் வாழ்க்கை முழுவதுமே குடிநோயாளிதான், குடியைத் தொடாமல் இருப்பது மட்டும்தான் அதற்கு ஒரே மருந்து’’ என்பதை மனப்பூர்வமாக உணர்கிறார். தமிழ்நாடு உட்பட உலகெங்கிலும் உள்ள குடிநோயாளிகளுக்கான ‘’ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’’ என்ற அமைப்பின் உதவியை நாடுகிறார்.
அவரைப் போன்ற குடிநோயாளிகள் சந்தித்து தங்கள் வாழ்க்கையைப் பரிமாறிக்கொள்ளும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து போகிறார். அது அவரின் மனநிலையை மாற்றுகிறது. ஒரு புது மனிதனாக மாறுகிறார்.
அதன் பின் அவரின் குடும்பத்துடன் இணைகிறாரா? இல்லையா? என்பதுதான் ‘’அப்பா…வேணாம்ப்பா…’’ என்ற இத்திரைப்படத்தின் கதை.
* * * * * * * * * *
தொழில் நுட்பக்கலைஞர்கள்
1) இயக்கம் – R. வெங்கட்டரமணன்
2) ஒளிப்பதிவு- வேதாசெல்வம் DFT, வேல்முருகன் DFT
3) எடிட்டிங் – கெஜாராஜேஷ் DFT
4) இசை – V.K கண்ணன்
5) நடனம் – ‘’ஸ்டைல்’’ பாலா
6) ஆர்ட் – சிவராமன்
7) காஸ்ட்யூம் – முத்து
8) எபெக்ட்ஸ் – ஷண்முகம்
9) மக்கள் தொடர்பு – A.ஜான்
10) டிசைன்ஸ் – ஷிவா