அருண் விஜய் நடித்திருக்கும் குற்றம் 23 படத்தின் தெலுங்கு டப்பிங் நேற்று ஆரம்பமானது
அருண் விஜயின் ‘குற்றம் 23’ திரைப்படம், உருவாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அறிவழகன் – அருண் விஜய் ஆகியோரின் அற்புதமான கூட்டணி தான் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். புகழ் பெற்ற திகில் கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – கிரைம் – திரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங், பிரபல தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா ராமகிருஷ்ணாவுடன் இணைந்து நேற்று ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் அருண் விஜயின் புகழ் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். ‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘என்த வாடு காணி’ திரைப்படம் மூலமாகவும், அல்லு அர்ஜுனின் ‘புரூஸ் லீ’ திரைப்படம் மூலமாகவும் சிறந்ததொரு அதிரடி நடிகராக தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டார் அருண் விஜய். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அமோக வாய்ப்புகளை அருண் விஜய் பெற்று வருவதே அதற்கு சிறந்த உதாரணம்.
“தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகினரின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் குற்றம் 23 திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் படத்தின் டப்பிங் வேலைகளை நாங்கள் தற்போது புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா திரு ராமகிருஷ்ணனோடு இணைந்து தொடங்கி இருக்கிறோம். மணி ரத்னம் சார் மற்றும் ஷங்கர் சாரின் திரைப்படங்களுக்காக வசனகர்த்தாவாக பணியாற்றும் திரு ராமகிருஷ்ணன் தான் குற்றம் 23 படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக பொறுப்பேற்று இருக்கிறார். தெலுங்கு படத்தின் தலைப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்துவிடுவோம். ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும், மிக பிரம்மாண்டமான முறையில் எங்கள் குற்றம் 23 படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.