சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்!
பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர் சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ .
பெண்தானே தேவதை? இது என்ன ‘ஆண் தேவதை’ என யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலச்சந்தர்– பாரதிராஜா இருவரையும் ‘ரெட்டச்சுழி’ படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர்.
‘ஆண்தேவதை’யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, ‘பூ’ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.
இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது.
இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்.
‘ இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ஃபக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா. இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கவும் உள்ளார்.
சற்றே இடைவெளிக்குப்பின் வந்தாலும் , விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கை கோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு திரைக்களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.
முழுக்க முழுக்க சென்னையில் உருவாகவுள்ள ‘ஆண்தேவதை’ யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
தயாரிப்பு – சிகரம் சினிமாஸ்
இயக்கம் – தாமிரா
தயாரிப்பாளர் – ஃபக்ருதீன்
ஒளிப்பதிவு – விஜய் மில்டன்
இசை – ஜிப்ரான்
எடிட்டிங் – காசிவிஸ்வ நாதன்
கலை இயக்கம் – ஜாக்சன்
சண்டைப்பயிற்சி – ரன் ரவி
காஸ்ட்யூம் டிசைனர்- கீர்த்திவாசன் & ஷோபியா சவுரிராஜன்
தயாரிப்பு நிர்வாகம்- அண்ணாமலை