அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார்.
இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கிறார். நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். முன் பின் தெரியா இரு நபர்களின் நட்பும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்களின் தொகுப்பே ‘ரொம்ப நல்லவன்டா நீ’.
“எனக்கும் நகைச்சுவைக்கும் உள்ள நட்பு அதீதமானது. காதல் படமோ,ஆக்ஷன் படமோ நகைச்சுவை இல்லாமல் நான் படமெடுக்க மாட்டேன். இருப்பினும் முழு நீள காமெடி படம் செய்ய வேண்டும் என்பது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. மிர்ச்சி செந்தில் அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை கண கச்சிதமாக செய்து முடித்தார். அறிமுக நாயகி ஸ்ருதி பாலா மற்றும் ரோபோ சங்கர் மிக அழகாக நடித்துள்ளனர் “ என்றுக் கூறினார் இயக்குனர் A. வெங்கடேஷ்.