.
.

.

Latest Update

உலகநாயகன் கொடுத்த ஊக்கம்! நெகிழும் நடிகர் ஸ்ரீராம்


கதாநாயகனான உதவி இயக்குநரின் மகன்!

தனி நாயகனாகி விட்ட ‘பசங்க’ ஸ்ரீராம் !

‘பசங்க’ படத்தில் சிறுவனாகவும் ‘கோலிசோடா’ படத்தில் சற்று வளர்ந்த பையனாகவும் நடித்த ஸ்ரீராம் இப்போது வளர்ந்து வாலிபனாகி ‘பைசா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இப்போது ஸ்ரீராமின் கவனம் கனவு எல்லாம் ‘பைசா’ வையே வட்டமிட்டபடி உள்ளன. ‘பைசா’பட அனுபவம் பற்றிய பேசும் போது

” இதை இயக்கியுள்ளவர் மஜீத் சார். அவர் இதற்கு முன் ‘தமிழன்’ படம் இயக்கியவர். அந்தப் படம் சமூகக் கருத்தை சொன்ன வகையில் மிகவும் பாராட்டப்பட்ட படம்.

விஜய் சாரை வைத்து ‘தமிழன்’ படம் இயக்கிய இயக்குநர் படத்தில் நானும் நடிப்பதில் பெருமை. மஜீத் சார் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பவர். இதில் நடித்ததை மறக்க முடியாது.” என்றவர், படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றிப் பேசும் போது.

“இது சென்னையில் இருக்கும் குப்பைகள் மற்றும் குப்பைப் பொறுக்குபவன் பற்றிய கதை.
அதை வைத்து நல்ல சமூகக் கருத்தை சொல்லி விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்துக்காக சென்னையில் பல குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து நடித்தேன். படக்குழுவும் குப்பை, தூசு, நாற்றம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பயணம் செய்தனர்.

பிரதமர் நரேத்திர மோடியின் தூய்மை இந்தியா கருத்தை தூக்கிப்பிடிக்கும் படமாகவும் இது இருக்கும்.’பைசா’வில் நாயகியாக புதுமுகம் ஆரா நடித்துள்ளார்.
இதில் நாசர் சார் போன்ற மூத்த அனுபவசாலிகளுடன் நடித்தது மறக்க முடியாதது. யதார்த்தமும், உயிரோட்டமும் கொண்ட படமாக இருக்கும். இது ஒரு கலர்புல் ‘காக்கா முட்டை’ யாக இருக்கும் என்று கூறலாம்.” என்கிறார்.

படப்பிடிப்பு அனுபவம் ஸ்ரீராமை வெகுவாக மாற்றியிருக்கிறதாம்.

” சென்னையில் நாளுக்குநாள் பெருகிவரும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் தானாக வந்ததில்லை. எல்லாமே மனிதர்களால் வந்தவைதான். மக்கள் குப்பைகளை உரிய இடத்தில் குப்பைத் தொட்டியில் கூட போடுவதில்லை.

கண்ட கண்ட இடங்களில் வீசுவதால் கால்வாய் வரை போய் அடைத்துக் கொள்கின்றன. அதனால் எவ்வளவு இடையூறுகள் !காரில் சொகுசாகப் போய்க் கொண்டு குப்பையை வெளியே வீசிச் செல்கிறார்கள். இனி நாம் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. குப்பையை குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும் என்கிற விழிப்பையும் மாற்றத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது இந்த பட நடிப்பு அனுபவம். படமும் மக்களிடையே அப்படி ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.

இப்படத்தின் கதை பாத்திரப் பொருத்தம், நடிக்கும் திறமை இவற்றின் அடிப்படையிலேயே ஸ்ரீராமுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஸ்ரீராம் அடுத்து ‘சகா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதை ஒரு புதியவர் இயக்குகிறார். வேலு விஸ்வநாத் இயக்கத்தில் ‘கபே ‘ என்றொரு படத்திலும் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘வெள்ளச்சி’ இயக்கியவர். இப்படத்தை கீதாலயா மூவிஸ் தயாரிக்கிறது.

இது தவிர ‘தரைடிக்கெட்’ என்றொரு படம் உள்பட 3 புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.
ஸ்ரீராமின் தந்தை சிவராமகிருஷ்ணன் ஓர் உதவி இயக்குநர்.அவர் ஐ.வி.சசி, பிரதாப்போத்தன்,அகத்தியன் போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றியவர். சில விளம்பரப் படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஸ்ரீராம் நடித்து சமீப நாட்களில் வெளியான ‘வஜ்ரம்’ ,’கமர கட்டு’ இரண்டும் வரவேற்புக்குரிய விமர்சனங்கள் பெற்றன. ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லையே. இதுபற்றி ஸ்ரீராமிடம் கேட்ட போது

“சினிமாவில் வெற்றி தோல்வி, ஏற்ற இறக்கம் எல்லாம் சகஜம்தான். இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.நாம், நம் வேலையைச் சரியாகச் செய்து கொண்டே போகவேண்டும். அது நிச்சயம் ஒருநாள் கவனிக்கப்படும்.” என்கிறார் தெளிவான முதிர்ச்சியுடன்.

அண்மையில் மே–1ல் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீராமிடம் ‘பசங்க’, ‘கோலி சோடா’ போலவே பலரும் பேசிய விஷயம் ‘பாபநாசம்’ பற்றியும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடித்தது பற்றியும் தானாம்.

அது பற்றிப் பேசியதும் தன் பிறந்தநாள் மகிழ்ச்சி இரட்டிப்பானது என்கிற ஸ்ரீராம், பூரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார்.

” நான் உலகநாயகன் கமல் சாரின் பரம ரசிகன். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அவரைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்த எனக்கு நடிக்கிற வாய்ப்பே கிடைத்தது. அவருடன் நடிக்க முதலில் மிரட்சியாக இருந்தது. என் பயத்தைப் போக்க அவர் இயல்பாகப் பேசி சகஜமாக்கினார். அவ்வப்போது உடனிருந்து ஊக்கப் படுத்தியதுடன் குறிப்புகளும் கொடுத்தார். அவரை நான் முதலில் ‘பசங்க’ ஆடியோ விழாவில்தான் பார்த்தேன்.

பேசப் பயம் ,தயக்கம். ஆனால் அவரோ என் முதுகில் தட்டிக் கொடுத்து ‘எல்லாப் படத்தையும் முதல்படம் போல செய்யவேண்டும்’ என்றார். அதை நான் மறக்க வில்லை.

‘பாபநாசம்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடுபுழாவில் நடந்தது. அப்போது அவர் அன்று சொன்னதை அவரிடம் நினைவு படுத்தினேன். நான் உங்களைப் பார்த்து கற்றுக் கொண்டு வருகிறேன் என்றும் கூறினேன். அங்கு படப்பிடிப்பு நடந்த பத்து நாட்களும் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் நான் சேர்மத்துரை என்கிற பாத்திரத்தில் நடித்தேன். என்னைக் கமல் சார் சேர்மத்துரை சேர்மத்துரை என்றுதான் கூப்பிடுவார் ஒரு பிரஸ்மீட்டில் கூட என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். எனக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?

அவர் என்னை கைப்பிடித்து அழைத்து உயர்த்தி வந்ததாகவே ‘பாபநாசம்’ அனுபவம் இருந்தது. பார்க்கிற இடங்களில் எல்லாம் கமல் சாரின் ரசிகர்கள் என்னைக் கண்டு கொள்கிறார்கள் விசாரிக்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள்.இதை விட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்? ”என்கிறார்.

நான்கு குட்டிப் ‘பசங்க’ ளில் ஒருவனாக வந்து ‘கோலிசோடா’ உடைத்த ஸ்ரீராம், நன்கு வளர்ந்து ‘பைசா’வில் தனி ஒரு நாயகனாக இருக்கிறார். வாழ்த்துக்கள்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles