.
.

.

Latest Update

என்னை முந்தி கொண்ட கமல் – “க்ளிக் ஆர்ட் மியூசியம்” விழாவில் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்


என்னை முந்தி கொண்ட கமல் – “க்ளிக் ஆர்ட் மியூசியம்” விழாவில் கலகலப்பூட்டிய ரா.பார்த்திபன்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் A.P.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தை பிரபல இயக்குனர் நடிகர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கைக் தீபத்தை வரைந்து ஏற்றினார்கள் .

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன் , A.P ஸ்ரீதர் போன்ற பலபேர் இருக்கிறார்கள் நானும் ரவுடிதான் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார் . குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ” என்றார் .

நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.ஸ்ரீதர் “இதுபோன்ற தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள் உலகம் முழுக்க பனிரெண்டு நாடுகளில் 42 இடங்களில் இது இருக்கிறது . பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது . இந்தியாவில் இதுதான் முதல் முதல் . அடுத்து பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன் . இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய்” என்றார்.

இங்கு என்ன சிறப்பு?

“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலைப் பொருள்கள் இங்கு நிறுவப்பட்டிருகின்றன. இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்றுதான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த ட்ரிக் ஆர்த்வகை ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகம் என்பது வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல் தன்மை கொண்டதாக இருக்கும். தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அப்படிப்பட்ட கலை, பங்கேற்பாளர் இன்றி இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாது . இது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது. பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.‘க்ளிக் ஆர்ட் மியுசியம்’ ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, உங்கள் அதிக மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும்! கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும்படி இருக்கிறது அந்த மாய உலகில் நாம் மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும்! இந்த TRICK ART 2,000 வருடங்கள் பழமையானது என்றும், பின்னர் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஓவிய வடிவமாக உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ‘டொம்போ-ல- ஈல்’ என்பது இதன் ஃப்ரெஞ்சுப் பெயர். ‘கண்களை ஏமாற்று’ என்று பொருள் .

ஓவியங்களை முப்பரிமாணத் தன்மையுடன், ஒரு நிஜப் பொருளாக காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வடிவம். அறைகள், உண்மையில் இருக்கும் அளவைக் காட்டிலும் பெரியதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக க்ரேக்கம் மற்றும் ரோமத்தில் இந்த ஓவிய வடிவம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கத்திய ஓவியங்களில் பல காலங்களாக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக மேற்கூரை வரைய. அக்காலத்தில், தட்டையானதொரு மேற்கூரையைக் கூட கவிந்த கூரையாகக் காட்டும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஓவியர்களாக இருந்தார்கள். 14ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலையில் தோன்றிய தொலைவுத் தோற்ற (perspective) காட்சியாக்கத்தின் விளைவாக, ஓவியக் கலை மற்றும் கட்டிடக் கலையில் பரந்த காட்சி வித்தைகளின் தேவை அதிகரித்தது. ஒளியியல் மாயை மூலம் கண்களை ஏமாற்றும் அந்த காட்சிக் கலை தொழில் நுட்பம் பின்னர் மாய-யதார்த்த உருவப் படங்கள் வரைவதற்கான ஒரு பாணியாக மாறி 17ஆம் நூற்றாண்டு வாக்கில் ஃப்ரென்ச்சு மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமானது.

கிரேக்கம் மற்றும் ரோமத்தில் அதன் வேர்களைக் கொண்டக் இக்கலையை போம்பெய் போன்ற பழமைவாய்ந்த நகரங்களில் இன்றும் காணலாம். பண்டைய கிராக்க ஓவியர் ஜீயுசிஸ் மற்றும் அவரது பரம வைரி ஃபர்ஹாசியஸின் கதை ஓவியம் பிரபல உதாரணம். இந்த வகை ஓவியத்தில் காணப்படும் செய்கைக்கு ஈடாக அல்லது பதிலாக ஒரு செய்கையில் ஈடுபட தூண்டுவதன் மூலம் இது பார்வையாளர் பங்கேற்பைக் கோருகிறது. ஒரு ஓவியக் களத்தில் ஓவியரும் பார்வையாளரும் போரில் ஈடுபடுவது போன்றதொரு நிகழ்வைத் தருவது. இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது மூளைக்கும் கண்களுக்கும் இடையில் ஒரு போரே நிகழ்கிறது. அனுபவங்கள் வாயிலாகவும், அனுமானங்கள் மற்றும் முன் முடிவுகள் மேற்கொள்ளும் பண்புகளாலும் மூளையில் முன்பதிவாக இருக்கும் காட்சிப் படிமங்கள் எதிரில் தெரியும் ஓவியம் என்ன சொல்கிறதென சட்டென முடிவெடுக்கத் தூண்டுகிறது,

அதேவேளை ஆழ் மனதோ உண்மையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தப் போராடுகிறது. இதுதான் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் உங்களுக்குக் கொடுக்கும் புதுமையானதொரு அனுபவம். ஒவ்வொரு கோணத்திலும் இடத்திலிருந்தும் காணும்போதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தந்திரக் கலை ஓவியங்களும் வேறு வேறு மாதிரித் தெரியும். புகைப்படக் கருவி கொண்டு காண்கையில் அந்த ஓவியங்களின் மாய அழகு பரம்மாண்டமாகத் தோன்றும். இந்தத் தந்திரக் கலை ஓவியங்களைக் காண்பதால் மூளை ஆரோக்கியமானதொரு புறத் தூண்டுதலைப் பெறுவதாக சமீப காலங்களில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை அனுபவிக்கும் மாற்றங்கள் மனிதனின் அடிப்படை இயல்பூக்கத்திற்கு சவாலாக அமைவதால் இத்தூண்டுதல் நல்ல மன எழுச்சியைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

உங்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது? உங்கள் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சி காத்திருக்கிறது. வேடிக்கை, நகைச்சுவை ஆனால் நிச்சயமாக நீங்கள் மூட்டாளாக்கப்பட மாட்டீர்கள்!

“கண் கட்டு வித்தைக்கு தயாராக வாருங்கள்” என்ற சவாலோடு அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:

1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.

2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார்டு தரப் போகிறார்.

3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.

4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம்கொடுங்கள்.

5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்?

6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவ் அரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா?

8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.

9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” –மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா? உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…

10. “மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.

11. “அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்தமாபெரும் குமிழியில்.

12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்!

13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.

14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்!

இதுபோல் மொத்தம் 24 ஓவியங்கள். இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. ஒரு மனிதன் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே கொண்டு வர இந்தக் கலைக்கூடம் உதவும்.

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குகிறார் உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.

இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஸ்ரீதர் காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு சிறந்த ஓவியர், யாரும் துணியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது. இதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளது. இது தவிர இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது. இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஏ.பி. ஸ்ரீதர் அமைத்துள்ள இந்த தந்திரக் கலை ஓவியக் காட்சியகத்தை இயக்குனர்- நடிகர் ஆர். பார்த்திபன் துவங்கி பல்வேறு ஓவியங்களுடன் இணைந்து தோற்றம் காட்டினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles