.
.

.

Latest Update

என் கெட்ட பெயரை மாற்றுவேன்! இயக்குநர் சாமி!


என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி!

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’.

பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்தி வருகிறது.

சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து வருகிறது.’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி.

இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’

எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி.

தன்மீது விழுந்த முத்திரை பற்றி அவர் என்ன நினைக்கிறார்?

”நானும் பெரிய பெரிய

மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என் படங்களை விமர்சித்தவர்கள் கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு.

எது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி.இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை மாற்றுவேன்.இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும் . ”என்கிறார்.

சாமி பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் என்று வைரமுத்து கூறியுள்ளாரே?

“கவிப்பேரரசு வைரமுத்து சார் பற்றி நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும்.அவர் இருக்கிற உயரத்துக்கு என்னைப்பற்றி புகழ்ந்து பேச அவசியமில்லை. அவர் அப்படிப் பட்ட மனிதரும் அல்ல.

அவர் பாடல் எழுத வேண்டும் என்று நான் விரும்பி அவரைச் சந்தித்தேன். வைரமுத்து அவர்களை அணுக எனக்கு பயமாக இருந்தது. அவருக்கு சம்பளம் எப்படியோ என தயக்கம். ஸ்ரீநிவாஸ் மூலம்தான் அவரிடம் போனோம். நம் படத்தின் பட்ஜெட்டுக்கு அவர் வாங்கும் சம்பளத்தைக் கொடுக்க முடியுமா என்று பயந்தேன். எனவே யோசித்தேன். கதை கேட்டார் சொன்னேன். சம்பள விஷயம்பற்றி தயங்கிக் கேட்டதும்எங்கள் பட்ஜெட் நிலையறிந்து எழுதிக் கொடுத்தார்.. தன் 5 பாடல்கள் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்துவிட்டார். எனக்குப் பணம் முக்கியமில்லை என்று குறைத்துக்கொண்டு எங்கள் பட்ஜெட்டுக்குள் வாங்கிக் கொண்டார்.

அவரிடம் பேசியபோது தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர் யோசிக்க வில்லை.என்னைப்பற்றி என் படத்தைப் பற்றி படப்பிடிப்பு பற்றி பட்ஜெட்பற்றி சினிமாவின் இன்றைய தொழில் சூழல்பற்றி படைப்புச் சூழல் பற்றியெல்லாம் பேசினார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நம் சினிமாபற்றி உலக சினிமா பற்றி எல்லாம் நிறைய பேசினார். நான் வியப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

ஒரு பாடல் உருவாகும்போது அவர் எடுத்த அக்கறை சாதாரணமானதல்ல. ஒலிப்பதிவுக்கு வந்தார். உன்னிப்பாகக் கவனித்தார். வரிகளைப் பாடிக் காட்டினார்.அவருக்கு இருக்கும் வேலைகளில் அவர் இருக்கும் உயரத்தில் இதெல்லாம் அவருக்கு அவசியமில்லை. இருந்தாலும் செய்தார்.அதுதான் அவரது தொழில் நேர்த்தி.அதனால்தான் அவர் இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் நிற்கிறார்.

படத்தில் வரும் பாடல் காட்சிகளை யார் யார் எல்லாம் எந்தெந்த விதத்தில் எல்லாம் சிறப்பு சேர்க்க முடியும் என்று அவர் விளக்கியதும் எனக்குள் பல ஜன்னல்கள் திறந்த உணர்வு.

‘கங்காரு’ பாடல்கள் இப்போதே வெற்றிபெற்று விட்டன. படம் வந்ததும் மேலும் பட்டையைக் கிளப்பும் அவருக்கு இன்னொரு தேசியவிருது நிச்சயம்.
இத்தனை நாள் வைரமுத்து சாரை சந்திக்கவில்லையே என வருத்தப் பட்டேன். அவர் எனக்கு சினிமா குருநாதர் ஆகிவிட்டார். இனி என் எல்லாப் படங்களுக்கும் அவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்றிருக்கிறேன்.” என்று நீ ஈஈஈளமாக வைரமுத்துவுடனான நினைவுகளில் மூழ்கியவரை அடுத்த கேள்வி கேட்டு மீட்டோம்.

மற்ற சிறப்புகள் என்னென்ன?

”இசையமைப்பாளர் புதிதாகத் தேடிய போது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக்காட்டி என்னைக் கவர்ந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம்.

இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன்.நடிகர்களுக்காக நான் என்றும் கதை செய்ய மாட்டேன். ” என்கிறார்.
அண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது என்பார்களே..?
“நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன.

‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.

முந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். ‘இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு ‘என்று .அந்த அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும். “என்கிறார்.

இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும் என்பது அவரது பேச்சிலிருந்து புரிகிறது.’கங்காரு’ படம் வரட்டும்.

ஐயப்பசாமி மாலை போட்டவராக திருந்திய’நல்ல’சாமிக்கு வாழ்த்துக்கள்!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles