.
.

.

Latest Update

கங்காருவில் பாசமிக்க தங்கச்சி…கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி…


Actress Priyankaphotos (4)கங்காருவில் பாசமிக்க தங்கச்சி… ‘வந்தா மல’யில் ரகளையான வட சென்னைப் பெண்.

இப்போது கோடை மழையில் அம்சமான கிராமத்து அழகி… நெல்லைச் சீமையின் மண்வாசனை நாயகியாக அச்சு அசலாகப் பொருந்திவிட்டார் என குவிகின்றன பாராட்டுகள்.

நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலும், இன்னும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது ப்ரியங்காவுக்கு. அது கோடை மழை படம் மூலம் தணிந்திருக்கிறது.

பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆரம்பத்தில் படம் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. இப்போது மெல்ல மெல்ல படம் குறித்த ‘டாக்’ நல்லவிதமாகப் பரவ, சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரியங்கா.

கோடை மழை பட அனுபவங்கள் குறித்துக் கேட்டபோது, “ஹைய்யோ… சொல்ல நிறைய இருக்குங்க” என மலர்ந்தார்.

“ஒரு உதவி இயக்குநர் மூலமாகத்தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு வந்தது. கதை கேட்டதுமே, இது எனக்கு சரியான படமாக அமையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது,” என்றவரிடம், ‘இப்போதெல்லாம் பெரிய நடிகர்களே கதைத் தேர்வில் கோட்டை விடுகிறார்கள். உங்களால் சரியாக கதையைத் தேர்வு செய்ய முடிகிறதா?” என்றோம்.

“நிச்சயமாக. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் நடித்த மூன்று படங்களிலுமே என் பாத்திரம் மக்களால் பேசப்பட்டது. மூன்று படங்களுமே நல்ல கதைதான். எனவே கதை கேட்டு, சரியான பாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இதுவரை நான் கோட்டை விட்டதில்லை!” என்கிறார்.

Actress Priyankaphotos (5)மீண்டும் ‘கோடை மழை’க்குத் திரும்பினார்…

“கோடை மழை கிராமப் பின்னணியில் உருவான படம். எனக்கு நல்ல வேடம். பொதுவாக கிராமத்துப் பெண் வேடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்தப் படத்தில் இயக்குநர் சொன்னதை நான் செய்தேன். ஷூட்டிங்கில் நிறைய காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்கிக் கொண்டே இருப்பார் கதிரவன்.

நான், ‘இது எதற்கு? அது என்ன?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பேன். கதிரவனோ, ‘நான் சொல்வதை மட்டும் செய்ங்க.. அப்புறம் படத்தில் பாருங்க’ என்றார்.

அது எந்த அளவு உண்மை என்பதை படத்தில் பார்த்து வியந்தேன். படம் பார்த்த நிறையப் பேர் எனக்கு தியேட்டரிலிருந்தே போன் செய்து பாராட்டினார்கள்.

இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு நான் நடித்தது மறக்க முடியாதது. என் முதல் படம் கங்காருவிலும் அவர்தான் பாடல்கள் எழுதினார். இப்போது மூன்றாவது படத்துக்கும் அவர்தான் எழுதியிருக்கிறார். என்னை மாதிரி வளரும் நடிகைக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? கோடை மழையைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, ‘சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறாய்’ என்று என்னைப் பாராட்டினார். அது என் பாக்கியமாகக் கருதுகிறேன்,” என்றார்.

Actress Priyankaphotos (7)‘சரி, இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லுங்கள்?’

“உண்மையைச் சொல்லணும்னா… எனக்கு அவருடைய பாடல் வரிகளைப் போட்டுக் கூடக் காட்டவில்லை. படப்பிடிப்பில், ‘எப்போ சார் சாங் ஷூட் பண்ணுவீங்க’ என்று இயக்குநரை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவரோ, ‘எடுக்கலாம்.. எடுக்கலாம்’ என்று சொல்வார். அவ்வப்போது, என்ன சில பாவங்கள் காட்டி அப்படி நடித்துத் தரக் கேட்பார். ப்ரிவியூ பார்த்த போதுதான், அதெல்லாம் பாடல் காட்சிகளுக்காக எடுக்கப்பட்டவை என்பதே எனக்குத் தெரிய வந்தது,” என்று அழகாகச் சிரித்தார்.

“ரொம்ப அழகா சிரிக்கிறீங்க? இந்த சிரிப்பில் கவிழ்ந்தவர்கள் எத்தனைப் பேரோ? என்று கேட்டால், இன்னும் அழகாகச் சிரித்தபடி, ” என்னுடைய சிரிப்பை நிறையப் பேர் பாராட்டியது உண்மைதான். ஆனால் கவிழ்ந்தவர்கள் லிஸ்டெல்லாம் என்னிடம் இல்லை,” என்றார்.

இயல்பிலேயே சிவப்பழகியான ப்ரியங்கா, இந்தப் படத்துக்காக சற்று மாநிறம் கொண்ட பெண்ணாக மாறியிருந்தார். அது மேக்கப்பாக இருக்குமோ என்று நினைத்தால் தவறு. படத்துக்காக வெயிலில் வாடி வதங்கி கறுத்து நடித்தாராம்.

“கருப்பு நிறம் என்பது துருத்திக் கொண்டு தெரியாமல் அளவோடு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை வெயில்ல நிக்க வச்சே படமாக்கினாங்க. வசனம் சொல்லிக் கொடுக்கும்போது கூட வெயில்லதான். அந்தப் பக்க வெயிலு வாட்டி வதைக்கும். நிழல்ல நிக்கலாம்னாலும் இயக்குநர் விடமாட்டார். அப்படியெல்லாம் செஞ்சதாலதான் இப்ப நீங்க பாராட்ற அளவுக்கு நிறம் அமைஞ்சது!”

Actress Priyankaphotos (9)படத்தில் வரும் மூச்சுப் பிடிப்பை சரி செய்யும் காட்சி… அது என்னன்னு தெரிஞ்சு நடிச்சீங்களா…?

“இல்ல.. உண்மையில் எனக்குத் தெரியாது. அந்தப் பாட்டி ‘போய் குச்சி ஒடிச்சிட்டு வா’ன்னு சொன்னப்ப, ‘ஓ.. குச்சியால அடிச்சி மூச்சுப் பிடிப்பை சரி செய்வாங்க போல’ன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது எவ்வளவு பெரிய விஞ்ஞானம்னு… நம்ம முன்னோர் அபாரமான மூளைக்காரங்க,” என்றார்.

பேச்சு கோடை மழைக்கு வெளியில் வந்தது…

‘கான்ட்ராவர்சி இயக்குநர் எனப்படும் சாமி படத்தில் ஒருமுறை நடித்த நாயகிகள் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்ததில்லை. கங்காரு ப்ரியங்காவுக்கு மீண்டும் நடிக்கும் ஐடியா இருக்கா?’

“அவர் அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை!”

‘இந்த மாதிரி வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் ஏதாவது உள்ளதா?’

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு வருகிற காமெடி, காதல், குறிப்பாக நானும் ரவுடிதான் மாதிரியான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கதை, பாத்திரத்தின் முக்கியத்துவம்… இரண்டும் பிடித்திருந்தால் போதும். நடிக்கத் தடை இல்லை.”

அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிப் பேசிய ப்ரியங்கா, “கோடை மழை மாதிரி நல்ல கேரக்டர்கள் அமைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு சாரல், ரீங்காரம் படங்களில் நடித்து வருகிறேன். திருப்பதி லட்டு என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன்,” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles