கபாலி’ திரைப்படத்தை காண்பதற்காக படப்பிடிப்புக்கு லீவ் விட்டனர் ‘பலூன்’ படக்குழுவினர்
ஜெய் மற்றும் அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படமானது, அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
“சிறு வயது முதலே, ரஜினி சாரின் படங்களை பார்த்து வளர்ந்த நாங்கள் அனைவரும், ஜூலை 22 ஆம் தேதியை ‘கபாலி’ தினமாகவே கொண்டாட முடிவு செய்துவிட்டோம். உலகமெங்கும் கபாலி படத்தின் வருகையை கொண்டாடி கொண்டிருக்க, நாங்களும் அதில் இணைய போகிறாம் என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையை ஏற்று, எங்களுக்கு விடுமுறை அளித்த பலூன் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு, படக்குழுவினரின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நெருப்புடா…என்னும் முழக்கத்துடன் நாங்கள் ஆரவாரமாக ரஜினி சாரின் கபாலியை கொண்டாட போகிறோம்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குனரும், தீவிர ரஜினி ரசிகருமான சினிஷ்.