“கோ 2 திரைப்படத்தில் அரசியலையும், உன்னோடு கா திரைப்படத்தில் நடிப்பின் ஆழத்தையும் கற்றுக்கொண்டேன் ” என்கிறார் நடிகர் பால சரவணன்
பொதுவாக ஒரு நகைசுவை நடிகரைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுவதற்கான காரணம் அவரது தனித்தன்மையால்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன், தற்போது விரைவில் வெளியாக இருக்கும் கோ 2 மற்றும் உன்னோடு கா திரைப்படங்கள் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
குட்டி புலி மற்றும் திருடன் போலீஸ் படங்களில் தனது கலகல பேச்சுகளாலும், துறுதுறு செயல்களாலும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த பால சரவணன், பல சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மே 13 ஆம் தேதி வெளியாகும் கோ 2 மற்றும் உன்னோடு கா திரைப்படங்கள் தனக்கு இரட்டை விருந்தாக அமையும் என்கிறார் இவர்.
கோ 2: பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம் தன் வாழ்க்கையில் மிக முக்கிய மைல் கல்லாக அமையும் என்கிறார் பாலா சரவணன். “முதல் முறையாக பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் சாருடன் நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த இளம் வயதிலேயே தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுடன் கை கோர்த்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன், எனக்கு அரசியலை பற்றி அவ்வளவு விவரம் தெரியாது. ஆனால் இப்பொழுது எனக்கு கொஞ்சம் நஞ்சம் புரிகிறது. சிறு வயதிலிருந்தே தளபதி மற்றும் காதல் தேசம் படங்களை பார்த்து வளர்ந்த நான், அதில் உள்ள நட்பு என்னும் மைய கருத்தை கொண்டு கோ 2 திரைப்படத்தில் நடித்துள்ளேன். இப்படிப்பட்ட வாய்ப்பை எனக்கு அளித்த RS இன்போடைன்மென்ட் எல்ரட் குமார் சார், இயக்குனர் சரத் மற்றும் இணை தயாரிப்பாளர் மணிகண்டன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்கிறார் பால சரவணன்.
உன்னோடு கா: அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்திருக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் RK இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி நடிகர் பால சரவணன் கூறுகையில், “ஆரி மற்றும் டார்லிங் 2 புகழ் மாயா கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் நான் மிஷா கோஷலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். தமிழ் சினிமாவின் மூத்த முன்னோடி அபிராமி ராமநாதன் சார் அவர்களின் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த ஒரு வரம். சினிமாவில் அ முதல் ஃ வரை அனைத்தையும் அறிந்த ராமநாதன் சாரின் படத்தில் நடித்தது மூலம், நடிப்பின் ஆழத்தையும், அதன் நுணுக்கங்களையும் நன்றாக கற்று கொண்டேன். நடிப்பு என்னும் துறையில் ஜாம்பாவான்களாக திகழும் பிரபு சார் மற்றும் ஊர்வசி மேடமுடன் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. மே 13 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டுப் படங்கள் வெளியாவது நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக தான் இருக்கும்.” என்று சொல்கிறார் பால சரவணன்.