தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’ வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது “ எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது.”
“ நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்”
“ எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது. சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புது புது திறமைகள் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.”
“ இவ்வருடம் இரண்டு படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமான கதை களத்தை உடையதாய் இருக்கும். எனது முயற்சிகளை எப்போதுமே ரசிகர்கள் ஆதரித்ததுண்டு. தயாரிப்பாளர் , இயக்குனர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று தனக்கே உரித்தான நம்பிக்கையுடன் கூறினார் நடிகை சிம்ரன்.