ஸ்ரீசாய் சர்வேஷ் தயாரித்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வருகிறது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கண்மணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். விவேகா ஒரு பாடலையும் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் பாடலாசிரியர் வரிசையில் முதலில் கபிலன்வைரமுத்துவின் பெயரும் இரண்டாவதாக விவேகாவின் பெயரும் அச்சாகியிருந்தது. படத்தில் அதிகப்படியான பாடல்களை கபிலன் எழுதியிருப்பதால் அவர் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்துவிட்டு கபிலன்வைரமுத்து இயக்குநரை அழைத்திருக்கிறார். “போஸ்டர்ல விவேகா பேர இரண்டாவதா போட்டிருக்கீங்க. அவர்தான் சீனியர். அவர் பேர்தான் முதல இருக்கணும். தயவு செய்து மாத்தீருங்க” என்று கேட்டிருக்கிறார். அதன்படி அனைத்து போஸ்டர்களிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனும் தம்பி ராமையாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார்.