.
.

.

Latest Update

‘சென்னையில் திருவையாறு’


Chennaiyil Thiruvaiyaru Season 10 Press Meet Stills (14) ‘சென்னையில் திருவையாறு’

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய
தரமான, அழகான, முழுமையான ’சென்னையில் திருவையாறு’ என்னும் இசை விழா சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த விழாவை, இசைத்துறையில் உங்களுக்காகப் பணியாற்றி வரும் எமது “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” ( Lakshman Sruthi Musicals ) வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பத்து. இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு திருவிழா ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

சென்னையில் திருவையாறு – ஒரு சிறிய அறிமுகம்
‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள
தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது, எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஒரு சிறு விளக்கம்தான் இந்த அறிமுகம்.

லஷ்மன் ஸ்ருதி இசையகம் ( Lakshman Sruthi Musicals ) சார்பாக கடந்த 2005 ம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதிதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவர் மனமும் இசையோடு ஒன்றி அமைதி மற்றும் ஆனந்தம் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.

திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி ஏன் உருவாக்கக் கூடாது என்று எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும்,அந்த விழாவுக்கு ’சென்னையில்-திருவையாறு’ என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.

இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு’ விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு……
சங்கீதம் இறைவனின் பேச்சு
சங்கீதம் சாமானியனுக்கும் சர்வேஸ்வரனுக்குமான நேரடித் தொடர்பு
சங்கீதம் கண்ணுக்குப் புலப்படாத கருணை ஊற்று
சங்கீதம் உடைந்த உள்ளத்திற்கு மருந்து
சங்கீதத்திற்குக் கட்டுப்படாதவரையும்,
தலைவணங்காதவரையும் காண்பது சாத்தியமே இல்லை.
இசை என்ற ஒன்று இல்லாமல் இவ்வுலகில் ஆலயமோ, திருச்சபையோ, பள்ளிவாசலோ, குருத்வாராவோ கிடையாது.

சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும்
இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்ககூடியது.

எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே.

இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை.
இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது மிகையாகாது.
உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி.
அதையடுத்து பொதுவான மொழியென்றால் அது இசை ஒன்றே.

இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் ‘பருவம்’ என்ற குறிப்பிட்ட காலத்தை உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான். அதுவே மார்கழி.
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள்.
இந்த மாதத்தின் சிறப்புப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்: –

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம்
பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம்
தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம்திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம்
மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான்
அவதரித்த மாதம்
ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம்
வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம்
கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும் மாதம்
ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம்
இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி.
அப்படிப்பட்ட மார்கழி மாதமும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையும் இணைவதே மார்கழி இசை விழா.அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே. எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள்.இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார். இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.

மேலும் வாத்தியக்கலைஞர்கள் தாங்கள் இசைக்கும் கருவிகளான ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா, வேய்ங்குழல் (புல்லாங்குழல்), ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஜலதரங்கம், ஸந்த்தூர்,வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன், கீபோர்டு மற்றும் பல கருவிகளோடு இந்த ஐந்து கீர்த்தனைகளை இசைத்து வருகின்றனர். நாம் சற்று உற்றுநோக்கினால் தென்னிந்திய இசைக் கருவிகளால் இசைக்கப்பட்ட தியாகராஜரின் கனராக உருப்படிகள் இன்று வடஇந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளாலும் இசைக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாக்களில் கலந்துகொள்கிற அயல் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் எப்படியெல்லாம் மதம், மொழி, நாடு, காலம் கடந்து சிறப்புற்று விளங்குகிறது என்பதை அறியும் போது, எல்லோரும் குறிப்பாக ஒவ்வொரு இசைக்கலைஞனும் பெருமை கொள்கிறான். இப்படி பெருமை வாய்ந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக்கும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சைத்தரணியில் அமைந்திருக்கும் திருவையாறில் ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்ற பெயரில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அறிந்தோரும் அறியாதோரும், கற்றோரும் கல்லாரும், கனிந்து உருகி களிப்பதுவே ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் எமது நிறுவனத்தின் சார்பாக ’சென்னையில்-திருவையாறு’ என்ற வடிவத்தில் பத்தாவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.

பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”.

கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ’பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர்.பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்துக் கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டுவர உள்ளார்கள்.இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளும் அடங்கிய புத்தகம்,
விழா துவங்கும் முன் வழங்கப்படும்.

சரியாக மாலை 6.00 மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முறைப்படி இசை விழாவைத் தொடங்கி வைக்கின்றார்.

இவ்வாண்டு விழாவில் நம் நாட்டின் தொன்மையான இசைக்கருவிகளில் ஒன்றான நாதஸ்வர இசைக்கருவியின் வாயிலாக இசைத்துறையில் பல்லாண்டுகளாக சேவை செய்து, இருபதாயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல் இசைத்து, பல்வேறு சாதனைகளை செய்து நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் நாதஸ்வர இசை மேதை ‘திருவிழா ஜெய்சங்கர்’ அவர்களை அவரது வாழ்நாள் இசைச்சேவவையை பாராட்டும் முகமாக ‘இசை ஆழ்வார்’ என்ற பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்ய உள்ளோம். இப்பட்டத்தை மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ‘ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்’ அவர்கள் அன்னாருக்கு வழங்கி சிறப்பிக்கின்றார்.

இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ், குமரேஷ் இருவரும் இணைந்து வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.தொடர்ந்து மறுநாள் 19ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்குத் துவங்கி, இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )