ஜெய்ஹிந்த் – 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருந்தார் அர்ஜுன்….
ஒரே முகம் மூன்று விதமான டென்ஷன் அவருக்கு காரணம் ஜெய்ஹிந்த் – 2 மூன்று மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என உருவாகி வருகிறது…அந்த பிஸி அவருக்கு.
· ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ?
இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் – 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை என்பதுதான் என் கருத்து.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை கோயில் என்பது பள்ளிகள் தான்.
இன்று கல்வி வியாபாரமாகி விட்டது. இன்று விலையுயர்ந்த வியாபாரமே கல்விதானே. அதை தவறு என்று சுட்டி காட்டுகிறோம்.
· உங்களது சினிமா பயணத்தின் அனுபவம் சுகமானதா ? சுமையானதா ?
என்று என்னை உலகளவில் பிரபலபடுத்தியது சினிமா தானே ! அது சுகமானது தானே ..எல்லா துறைகளிலும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும். நாம் நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் சுகம் தான். நான் நடிக்க வந்து முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. என் வாரிசு ஐஸ்வர்யாவும் நடிக்க வந்துவிட்டார்.
என்னை முழுமையாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்கிறேன். இது போதும் நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக எல்லாமே என்ன பொறுத்தவரை சுகமானதுதான்.
· படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள் போலிருக்கே?
குறைத்துக் கொள்ளவில்லை இன்று கூட எல்லா மொழிகளிலும் நடிக்க கேட்கிறார்கள். எனக்கேற்ற கதைகள் தேவை. விளையாட்டுத் தனமாக எல்லாம் இனி நடிக்க முடியாது.
இன்று விஞ்ஞானம் வேறு மாதிரியான வழியை திறந்து விட்டிருக்கிறது. ரசிகர்கள் எல்லாம் விமர்சகர்களாக மாறி விட்டார்கள்.
படம் பார்க்கும் போதே பேஸ்புக், ட்விட்டர் , வாட்ஸ்அப் போன்ற ஆயுதங்களால் உடனே தங்களது கருத்துகளை பதிகிறார்கள். அதனால் ரொம்ப நிதானமாக யோசிக்க வேண்டி இருக்கிறது.
· ஜெய்ஹிந்த் – 2 படத்தில் உன்ன்களது ட்ரேட் மார்க்கான ஆக்ஷன் இருக்குமா ?
அதிரடியான ஆக்ஷன் இருக்கும். கதையும் தூக்கலாக இருக்கும். இது ஒரு மாநிலத்துக்கான கதை இல்லை இன்று இந்தியா முழுக்க உள்ள அடிப்படை பிரச்சனையான கல்வியை பற்றியது.
அரசாங்கத்தில் உங்கள் உரிமையை கேட்டுப் பெற முடிகிற நீங்கள் உங்களின் கடமையை சரியாக செய்கிறீர்களா ? என்ற கேள்வி இங்கே எழுப்பப் படுகிறது.
· அடுத்து உங்கள் திட்டம் என்ன ?
பிரபல நடிகர்களை வைத்து நான் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து வித்தியாசமான படத்தை இயக்க உள்ளேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும்.
· இப்போதைய இளைய தலைமுறை நடிகர்கள் பற்றி….
எல்லோருமே ஒரு விதத்தில் திறமைசாலிகள் தான் அத்துடன் படித்த அறிவாளிகளாகவும் உள்ளார்கள். வெற்றியையும், தோல்வியையும் சகஜமாக பாவிக்கிற மனப் பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லோரும் ஜெயிக்க என் வாழ்த்துக்கள் என்றார் அர்ஜுன்.