நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கிய ‘கத்துக்குட்டி’ படம் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் திரையிடப்பட்டது. ‘மண்ணின் மகத்துவப் படைப்பு’ எனக் கொண்டாடி, படத்தின் இயக்குநர் இரா.சரவணன், இசையமைப்பாளர் அருள்தேவ் இருவரையும் டெல்லிக்கு அழைத்துக் கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம்.
சிறந்த படைப்புகளையும் கலைஞர்களையும் டெல்லிக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தும் டெல்லி தமிழ்ச் சங்கம், சமீபத்தில் வெளியான ‘கத்துக்குட்டி’ படத்தை ‘மண்ணின் மகத்துவப் படைப்பு’ என அறிவித்துப் பாராட்டியது. படம் வெளியான நான்காவது நாளே தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியானதைப் பாராட்டி, படத்தின் இயக்குநர் இரா.சரவணனை உடனே டெல்லிக்கு அழைத்தது தமிழ்ச் சங்கம். பெரிய அளவில் தமிழ் மக்கள் திரண்டிருக்க, சிறப்பு விருந்தினராக சத்தியசுந்தரம் ஐ.பி.எஸ். கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய டெல்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், ”படைப்பு எப்போதுமே மக்களுக்கானதாக இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இவ்வளவு ஆரவாரத்துடனும் கொண்டாட்டத்துடனும் ‘கத்துக்குட்டி’ படத்தைப் பார்த்துச் சிலிர்த்ததைப் பார்த்து நாங்களே ஆச்சர்யப்பட்டோம். செல்போன் டவர், ரியல் எஸ்டேட் வணிகம், மீத்தேன் திட்டம் போன்றவற்றால் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாய சோகங்களை கத்துக்குட்டி படத்தில் பார்த்த போது மனம் பதறியது. ஒரு விவசாயக் கூலியின் மகனாக இருந்து மண்ணுக்கான மகத்துவப் படைப்பைக் கொடுத்திருக்கும் இயக்குநர் இரா.சரவணனை டெல்லி தமிழ்ச் சங்கம் மனமாரப் பாராட்டுகிறது. மீத்தேன் திட்டத்தின் கபளீகர கொடூரங்களை இந்தப் படம் திரையில் சொன்ன சில நாட்களிலேயே தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்குத் தடை போட்டிருக்கிறது. ஒரு படைப்புக்கும் படைப்பாளனுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது. தலைநகரத்து தமிழர்களாக ‘கத்துக்குட்டி’யை நாங்கள் கொண்டாடுகிறோம். படத்தின் வெற்றி விழாவை டெல்லியில் நடத்தி படத்தின் கலைஞர்கள் அனைவரையும் கௌரவிக்க டெல்லி தமிழ் மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறோம்!” எனப் பாராட்டினார்.
டெல்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் முகுந்தன், ”கலை எப்போதுமே மக்களுக்கானது. மக்களின் நல்லது கெட்டதுகளை விளக்குவதே கலை. கத்துக்குட்டி படம் தஞ்சை மக்களின் வாழ்வியலையும் வலியையும் ஒருசேரப் பதிவாக்கி இருக்கிறது. மண்ணின் படைப்பைக் கொண்டாடுவது எங்களின் கடமை. ‘கத்துக்குட்டி’ படத்துக்கான வெற்றி, விவசாய மக்களுக்கான, விவசாய மண்ணுக்கான வெற்றி!” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சத்யசுந்தரம் ஐ.பி.எஸ்., ”கடந்த பத்து நாட்களாகத் தமிழ்நாட்டில் யாரிடம் பேசினாலும் ‘கத்துக்குட்டி’ படம் பற்றிய பேச்சாகவே இருந்தது. அந்தளவுக்கு மண்ணின் படைப்பாக ‘கத்துக்குட்டி’ கொண்டாடப்படுகிறது. கமர்ஷியலாகவும் பொழுதுபோக்காகவும் மட்டுமே படம் எடுப்பவர்களுக்கு மத்தியில் தஞ்சை மக்களின் வாழ்வையும் சூழலையும் சொல்லுகிற அற்புதமான காவியத்தை இயக்குநர் இரா.சரவணன் கொடுத்திருக்கிறார். மக்களுக்கான கருத்தை ஜனரஞ்சக விதத்தில் சொல்லி, பிறந்த மண்ணுக்கான பெருமையை நிலை நாட்டியிருக்கிறார். தஞ்சை மண்ணைச் சேர்ந்தவனாகவும் தமிழனாகவும் இந்தப் படத்தைப் பார்த்துப் பெருமிதப்படுகிறேன். தஞ்சை மக்களின் அடையாளமாக ‘கத்துக்குட்டி’ காலத்துக்கும் விளங்கும்!” என்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் இரா.சரவணன், “மண்சார்ந்த படைப்பைக் கொடுக்க கொஞ்சமும் தயங்காத என் தயாரிப்பாளர்களை இந்த இடத்தில் நன்றியோடு நினைக்கிறேன். இங்கே கிடைக்கும் கைத்தட்டல்கள் அனைத்தும் இந்தப் படத்தை வெளியே கொண்டுவர உதவிய திருக்குறுங்குடி சுந்தரபரிபூரணன் அவர்களையே சேரும். கத்துக்குட்டி படத்துக்கான அத்தனை அங்கீகாரமும் கடைக்கோடி விவசாயிகளுக்கானது” என்றார்.
விழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் இயக்குநர் இரா.சரவணன், இசையமைப்பாளர் அருள்தேவ் இருவரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டனர். தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பெருமாள், இணைப் பொருளாளர் ஜெயமூர்த்தி, சென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் பொன்னாடை, பரிசு கொடுத்து இரு கலைஞர்களையும் பாராட்டினார்கள். விரைவில் நடிகர்கள் நரேன், சூரி, ஸ்ருஷ்டி உள்ளிட்ட பலரையும் டெல்லிக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்த டெல்லி தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.