இளம் இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே நடித்த கத்துக்குட்டி திரைப்படம் 1-ம் தேதி ரிலீஸாக இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அன்வர் கபீர் படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ராம்குமார் தனக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் தரவேண்டும் என்றும் அந்த தொகையை செலுத்திய பிறகே ‘கத்துக்குட்டி’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையெடுத்து நீதிமன்றம் படத்துக்கு இரண்டு வாரம் இடைகால தடை விதித்தது.
இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ. 58 லட்சத்திற்கான காசோலையை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ராம்குமார் அளித்ததால், படத்திற்கான தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து இயக்குனர் இரா.சரவணன் கூறும்போது, “திட்டமிட்டபடி கடந்த 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . 9-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சில பிரச்சனைகள் குறிகிட்டதாலேயே இந்த தாமதம். காலங்கி நின்ற நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் அமீர், சசிகுமார் உள்ளிட்ட திரையுலகினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கேன். ‘புலி’ படம் ரிலீஸ் ஆனா சமயத்தில் இருந்ததைவிட இப்போது இன்னும் அதிக தியேட்டர்களில் “கத்துக்குட்டி” ரிலீஸ் ஆக வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றார்.