.
.

.

Latest Update

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு – தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்


ஆந்திராவுல, கேரளாவுல, கர்நாடகத்துல பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா ஆனால் அவர்களைவிட பட்ஜெட்டிலும், படத்தின் கலெக்‌ஷனிலும் முன்னிலை வகிப்பது தமிழ் சினிமா தான்.

ஒரு படம் துவங்கும்போது அதற்கு பூஜை என்ற சாஸ்திர சம்பிராதாயங்கள் செய்து அப்படத்தை தொடங்குகிறார்கள். அப்படம் குறித்த தகவல்கள் வெளிவர தினசரி பத்திரிக்கை, தொலைக்காட்சி என பல வழிகளில் பப்ளிசிட்டி செய்கிறார்கள், ஆனால் இவர்களுக்கெல்லாம் முன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கூகுளில் அவனுக்கு தோன்றிய விஷயங்களில் டைப் செய்து விஷயங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஊடக நண்பர்களும், இணைய பத்திரிக்கையாளர்களும்.. தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அந்த ஸ்பீடில் தமிழ் சினிமா வளர வேண்டும் என்ற ஆசையிலும் கனவிலும் இரவு பகல் பாராமல் செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருப்பது இணையம் மட்டுமே. இப்படி மகத்துவம் வாய்ந்த இணையதளங்களை உதாசினப்படுத்துகிறார்கள் சிலர்.

ஆனால் தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களுக்கு இணையம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. டச் ஃபோன் வாங்கிட்டு அதுல FM இருக்கா என்று கேட்கும் அளவுக்குத்தான் அறிவு இருக்கிறது பல தயாரிப்பாளர்களுக்கு

பத்திரிக்கையாளர்கள் என்றால் அமெரிக்க அதிபரே இரண்டு அடி தள்ளி நின்று சொல்லுங்க சார், என்ற அளவுக்கு மரியாதையும், பயமும் இருக்கிறது அந்த பேனா முனைக்கு. கவுண்டமனி சொல்ற மாதிரி “இவனுங்கள மாதிரி ஆளுங்களாலத்தான், இந்தியா இன்னும் முன்னேறாம இருக்கு” என்பதுபோல ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த அமைப்பும் பாதிக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களை இத எழுதாத, அத எழுதாத என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அதேபோல் பத்திரிக்கையாளர்களை உங்களை கூப்பிடாமல் இங்க ஏன் வந்தீங்கன்னும் கேட்க முடியாது, இதெல்லாம் தெரியுமா, இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நேற்று ஒரு தீர்மானத்தை அவசர அவசரமாக அமலுக்கு கொண்டு வந்துவிட்டார் தயாரிப்பாளர் டி.சிவா…

அந்த தீர்மானத்தில் “இனி இணைய பத்திரிக்கையாளர்களை எந்தவொரு சினிமா விழாவிற்கும், நிகழ்ச்சிக்கும் அழைக்க கூடாது என்று கூறிவிட்டாராம்.” இதனை சிவா தரப்பிலிருந்தும் உறுதி செய்துவிட்டனர். இதற்கு முன்பே இப்படி இணைய பத்திரிக்கையாளர்களை அழைக்க கூடாது என்று ஒரு பிரச்சனை கிளம்பி அதை 2 வருடத்திற்கு ஒருமுறை தூசி தட்டிக் கொண்டிருந்தார் பதவியில் இருந்தவர், ஆனால் இந்த முறை ஒரு படி மேல் சென்று எந்தவித பேச்சுவார்த்தையுமின்றி அனைத்து ஆன்லைன் பத்திரிக்கைகளை ஒதுக்கிவிட்டார்கள்”, இந்த தீர்மானத்திற்கு தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், பெஃப்சி சங்கம் என நான்கு சங்கங்கள் ஆதரவு அளித்துவிட்டனராம்.

ஏன் இந்த அவசர அதிரடி நடவடிக்கை என்று புரியாமல் இருந்த நமக்கு வந்த தகவல் இதுதான் “பாரி வேந்தரின் தொலைக்காட்சி சேனல்களான புதுயுகம், புதிய தலைமுறை, வேந்தர் டிவி ஆகிய மூன்று சேனல்களிலும் டி.சிவாவிற்கு தொடர்பு இருக்கிறது, சமீபத்தில் புலிப்பார்வை என்ற படத்தின் டிரெய்லரை பார்த்த பத்திரிக்கையாளர்கள் அதில் இருந்த காட்சியில் விடுதலைப்புலி பிரபாகரனின் மகனை இளம் புரட்சியாளனாக காட்டியிருந்தார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இணையமும் செய்திகள் வெளியிட்டன, இதனால்தான் டி.சிவாவுக்கு ஆன்லைன் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோவமாம்”. இதனால்தான் இந்த அதிரடி நீக்கம் என்று கூறுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ தேனி கூட்டில் கை வைத்துவிட்டார் டி.சிவா.

இதற்கான பலனை அவருக்கு ஆயுள் தண்டனையாக பத்திரிக்கையாளர் மாற்றிவிட்டனர். ஒன்னும் புரியலையா “இனி டி.சிவா கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சியில் எந்தவொரு புகைப்படக் கலைஞரும் புகைப்படம் எடுக்க மாட்டார்கள், அவரின் படங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள், மேலும் அவர் கொண்டுவந்த தீர்மானத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டும். மீண்டும் இந்த மாதிரி ஒரு தீர்மானத்தை நினைத்து கூட பார்க்கக் கூடாது என்பதுதான் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை.

இன்று இதற்கான இணைய பத்திரிக்கையாளர்கள் பேச்சுவார்த்தை சென்னை RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது, அனைவரும் ஒன்றுகூடி இந்த பிரச்சனை குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில்தான் டி.சிவாவை முற்றிலும் புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். விஷயம் இப்படியிருக்க இணையத்தின் மகத்துவம் தெரியாமல் இப்படி அவசரப்பட்டு ஒரு தீர்மானம் கொண்டு வந்துவிட்டார் டி.சிவா…

தமிழ் திரைப்பட ஊடகவியாலாளர்கள் சம்மேளனம் பின் வரும் வலிமையான தீர்மானங்களை இன்று 21- 09- 2014 முதல் முழுமையாக அமல்படுத்துகிறது.

* பெரும்பான்மை ஊடகங்களை தடுத்தும் இணைய பத்திரிக்கைகளை முழுமையான புறக்கணித்து அவமானப்படுத்தியும் ஊடகக் குடும்பத்தில் வஞ்சகமான பிரிவினையை ஏற்படுத்துவதற்காக நரித் தந்திர வேலைகள் செய்கிற — தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி இருக்கிற தமிழ் திரைப்பட பாதுகாப்பு படைக்கு தமிழ் திரைப்பட ஊடகவியாலாளர்கள் சம்மேளனம் சார்பில் வலுவான கண்டனம் தெரிவிக்கிறோம்.

*இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா, டி.ஜி.தியாகராஜன் , எல்எல்எம் முரளிதரன், ஏ.எல் அழகப்பன், இயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சரத்குமார், , ராதா ரவி , தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா ஆகியோர் சம்மந்தப்பட்ட எந்த நேர்மறைச் செய்திகளையும் அவர்களுக்கு ஆதரவான செய்திகளையும் இனி வரும் காலங்களில் பரப்புவது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.

*தமிழ் இன உணர்வோடு புலிப் பார்வை படத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மனதில் வஞ்சம் கொண்டு , ஒட்டுமொத்த இணைய தளங்களையும் முடக்க நினைத்ததோடு மற்ற ஊடகங்களையும் சிறுமைப்படுத்தும் இந்த பிரிவினை சூழ்ச்சிக்கு முழு முதற்காரணமாக இருந்த ராஜபக்சேவின் நண்பர் மற்றும் ஏஜன்ட்டான அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, மற்றும் அவர் இப்போது பணி புரியும் வேந்தர் மூவீஸ் சம்மந்தப்பட்ட படங்கள் பற்றிய எந்த நேர்மறைச் செய்திகளையும் ஆதரவான செய்திகளையும் இனி எக்காலத்திலும் பிரசுரிப்பது இல்லை என்று ஏக மனதாக முடிவெடுக்கிறோம்.

* நிரந்தர நிலைய வித்வான்கள் போல இருந்து கொண்டு, ஒரு நாளைக்கு நான்கு முறை போட்டோவுக்கு எக்கி எக்கி போஸ் கொடுக்கும் பழக்கமுள்ள- மேற்படி டி,.சிவா, டி.ஜி.தியாகராஜன், ஏ.எல் அழகப்பன், விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர் , தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா ஆகியோரின் புகைப்படங்களுக்கு இனி வரும் காலங்களில் படத்தின் பூஜை, ஆடியோ வெளியீடு , விளம்பர நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியிலும் இடம் தர மாட்டோம் என்று முடிவு செய்கிறோம்.

மேற்படி நிலைய வித்வான்கள் பங்கு பெறுகிற திரைப்பட விழாக்களின் புகைப்படங்களை பிரசுரிப்பதில்லை என்றும் முடிவுக்கு வருகிறோம்.

* காசாசை பிடித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தையும் கல்வி வியாபாரி பச்சைமுத்துவிடம் சிலர் அடகு வைக்க முயல்வதை தடுத்து, இந்த சங்கங்களை சுயமரியாதையோடு செயல்பட வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

* தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சிவா, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்ததற்கு இப்போது வருத்தப்படுகிறோம். ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் கேவலமான செயலுக்கு துணை போன இந்த சிவாவுக்கு, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் பதவி வகிக்க அருகதை இல்லை என்பதால், உடனே அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு, தனிப்பட்ட விதத்தில் அழுத்தம் கொடுக்கும் பணிகளை செய்ய இருக்கிறோம்.

* பத்திரிக்கையாளர்களுக்கு நடந்திருக்கும் அவமானம் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு க்கு முறைப்படி தெரிவிக்க இருக்கிறோம்.

* இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்துக்கு திரைப்படம் சம்மந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கிறோம் .

* மேற்படி அரைவேக்காட்டுத்தனமான தமிழ் சினிமா பாதுகாப்புப் படையின் அனுமதிப் பட்டியலில் இருக்கும் ஊடகவியாள நண்பர்கள், இதை ஒட்டுமொத்த ஊடகவியலாள சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகக் கருதி, இந்த தீர்மானங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

* புறக்கணிக்கப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாள நண்பர்கள், தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நிலைமையை உணர்த்தி, நமது நியாயமான புறக்கணிப்புக்கு துணை இருக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.

*இது குறித்த செயல்பாடுகளுக்கும், எதிர்கால திட்டமிடல் குறித்து ஊடகவியலாளர்களை ஒருங்கிணைக்கவும் திரு பிஸ்மி, திரு சங்கர் , திரு தேனி கண்ணன், திரு வின்சென்ட், திரு ரமேஷ்குமார் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்பாளர்களின் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்களுக்கு எல்லோரும் ஒருமித்து ஒட்டுமொத்த ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles