தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே! – ஒரு இளம் நாயகியின் வேதனை
தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா.
கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.
மேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.
நேற்று நடந்த சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என திரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் அவர் இப்படிப் பேசினார்:
“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் பேசுவது கூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.
ப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்றார்.
அடுத்து பேசிய நடிகர் விவேக் ஒருபடி மேலே போய், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.
முதல்ல தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா! – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’!
சென்னை: தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றிப் பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் அந்த தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருள்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசினார்.
சென்னை பிரசாத் லேபில் நேற்று நடந்த சாரல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இங்கு பேசிய பலரும் இது ஒரு குடும்ப விழா என்றார்கள். ஒரு இசை வெளியீட்டு விழா குடும்ப விழாவாக இருக்கக் கூடாது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் சிறு பட்ஜெட் படங்களை பிரபலமாக்குவதற்கு உள்ள வழி. இந்த நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களைத்தான் அதிகம் அழைக்க வேண்டும்.
சிறிய படங்கள் மக்களைச் சென்றடைய பத்திரிகையாளர்கள், குறிப்பாக இணையதளங்கள்தான் முக்கியம்.
இப்போது படங்கள் எடுப்பதைவிட, அதை எடுத்து வெளியிடுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. இப்போது கூட செங்கல்பட்டு ஏரியா திரையரங்குகளில் படம் வெளியிட முடியாத சூழலை சிலர் உருவாக்கியுள்ளனர். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம்.
தாணு என்ற பெரிய தயாரிப்பாளருக்கே இந்த நிலை என்றால், சிறு பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இவர்களிடம் என்ன பாடுபடுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
தியேட்டர்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும், படங்களுக்கு எம்ஜி முறை கூடாது என்றெல்லாம் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். கட்டணத்தைக் குறைப்பது இருக்கட்டும். முதலில் அங்குள்ள கேண்டீன்களில் விற்கப்படும் பாப்கான், தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பாருங்கள்.
தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் போகக் காரணம் என்ன? திருட்டு விசிடி மட்டுமா… என்னதான் இணையதளங்களில் படங்கள் வெளியானாலும், நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்காமல் இருந்ததில்லை. ஆனால் அப்படிப் பார்க்க நல்ல அரங்குகள் வேண்டாமா?
சென்னைக்கு வெளியே பல தியேட்டர்கள் மக்கள் படம் பார்க்கும் நிலையிலா இருக்கின்றன? அடிப்படை வசதி இல்லை. கேன்டீன்களில் அநியாய விலை. தேவையற்ற பார்க்கிங் கட்டணம் இப்படி ஏகப்பட்ட குறைகளைச் சொல்கிறார்கள் மக்கள். இதனால் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள்.
அதே போல தயாரிப்பாளர்களுக்குத் தரவேண்டிய சதவீதத்தை யாரும் ஒழுங்காகத் தருவதில்லை. சென்னை அரங்குகள் சரியாகத் தருகின்றன. ஆனால் மற்றவர்கள் அப்படியா… தினந்தோறும் மக்களிடம் பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பணத்தை வாரம் ஒரு முறையாவது தயாரிப்பாளருக்குத் தருகிறார்களா? இல்லை. பல தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களுக்குரிய பங்கைத் தந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இப்படி சினிமாவை முடக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வந்தால்தான் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடியும்.
இந்த சாரல் படம் வெளிவரும்போது, நல்ல சூழல் அமைந்து படமும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.