நடிகர், தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக் கழகம் வழங்கியது!
தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்தவரும், சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தின் தயாரிப்பாளருமான சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
கொச்சியைச் சேர்ந்த சைமன் தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தைத் தயாரித்தார்.
அடுத்து, ‘ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி?’ என்ற தலைப்பில் படம் தயாரிக்கிறார்.
பெரிய தொழிலதிபரான இவர், ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கி வருகிறார்.
அவரது சேவையைப் போற்றும் வகையிலும், தமிழ் பண்பாட்டு சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அப்போஸ்தல பல்கலைக் கழகம்.
சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த இதற்கான விழாவில், நீதிபதிகள் டிஎன் வள்ளிநாயகம், பி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் சைமனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் பேராயர் டாக்டர் எஸ்எம் ஜெயக்குமார்.
விழாவில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர், தொழிலதிபர் விஜி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கவுரவ டாக்டர் பட்டம் அளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்த சைமன், தொடர்ந்து தமிழில் நல்ல படங்களைத் தயாரிப்பேன் என்றும், நல்ல படங்களில் மட்டும் நடிப்பேன் என்றும் கூறினார்.