நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மாயம் காண வாராயோ
களம் படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்
அருள் மூவிஸ் தயாரித்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடவிருக்கும் படம் களம். தயாரிப்பாளர் சுபீஷ் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ராஜ் இயக்கியிருக்கிறார். ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல ஒரு பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடலை கபிலன்வைரமுத்து எழுதியிருக்கிறார். திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும் அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி கபிலன்வைரமுத்து எழுதியிருக்கிறார். ஏப்ரல் 29ஆம் தேதி களம் வெளியாகிறது. மாயம் காண வாராயோ பாடலின் வரிகள்:
பல்லவி
மாயம் காண வாராயோ – உன் கண்கள் பொம்மையோ?
நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்
என் மேனி ஆனதோ?
அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட
வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட
உள்ளே வருகவே
உன்னைத் தருகவே
சரணம்
ஜன்னல் மூடி மெளனம் கூட்டி
மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்
பிரயாணங்கள் அவை முடியும் முன்னே
பிறவி சாந்தியை பரிசளிப்பேன்
மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே
உனைக் கொண்டாடி ஓய்வேனே
அன்பாய்த் தொடும்
அந்நாள் வரும்