படிப்படியான வெற்றியை தொட்டிருக்கிறேன்
பெப்சி தலைவர் G.சிவா
அழகியல் கொண்டது சினிமா அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர்நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தை தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான G.சிவா.
அவரை சந்தித்து இந்த வெற்றியின் உயரம் எப்படி? என்றோம்..
ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பது தான் அர்த்தமானது எடுத்தவுடனே உயரத்துக்கு போக முடியாது.
ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் R.H.அசோக் ஒளிப்பதிவு செய்த படங்களில் உதவியாளராக பணியாற்றினேன். கே.பி சார் பெப்சி தலைவராக இருந்த போது அவருடன் இணைந்து பெப்சியில் பணியாற்றினேன்.மூன்று முறை செயலாளராக இருந்தேன்.
சினி காமிர அசோசியேசன்ஸிலும் செயலாளராக பணியாற்றினேன்.இப்போது பெப்சி தலைவர் என்ற பொறுப்பு. அத்துடன் பெருமையான விஷயம் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக இருக்கிறேன்.இதில் இன்னொரு பெருமையான விஷயம் என்னவென்றால். ஐந்து லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு தலைவர் என்கிற பொறுப்பு.
ஒரு தமிழன் இந்திய அளவில் போட்டியிட்டு வெற்றி என்பது எனது வெற்றி இல்லை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறேன். ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்து உரிமை கேட்கும் பொறுப்பு நிச்சயம் அவள்ளவு தொழிலாளர்களுக்காகவும் உழைப்பேன்.
சரி இப்படியான பொறுப்பு உங்களின் தனிப்பட்ட அடையாளங்களை இழந்து விடாதா ?
“தனம் “ என்ற தரமான படத்தை இயக்கினேன் நல்ல இயக்குனர் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.” குலசேகரனும் கூலிப்படையும் “என்ற படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. பொறுப்புகள் கூடக் கூடத் தான் தனிமனித அடையாளம் பளீரென தெரியும்.
சினிமா என்கிற பளபளப்பான துறைகளுக்குள் எவ்வளவோ உணர்சி போராட்டங்கள் அவ்வளவையும் சமாளித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றார் பெருமிதத்துடன்.
முயற்சி செய்தால் தமிழன் உலகயே வென்று காட்டுவான் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள் அதில் சிவாவும் ஒருவர்.