பல ரக ஆடுகளின் பெயர்களை மையமாக கொண்டு உருவாகும் ‘மரகத நாணயம்’ படத்தின் பாடல்
தமிழ் சினிமாவில் செல்ல பிராணிகளை மையமாக கொண்டு உருவாகிய பாடல்கள் ஏராளம். வெறும் நாய் மட்டுமின்றி, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்காகவும் நம் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் அர்பணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது முழுக்க முழுக்க ஆடுகளை கொண்டு உருவாகி வருகிறது, ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘மரகத நாணயம்’ படத்தின் பாடல். ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்து வரும் இந்த ‘மரகத நாணயம்’ படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே சரவண் இயக்க, இசையமைப்பாளராக திபு (அறிமுகம்) மற்றும் ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர் பணியாற்றி வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஆடுகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த பாடலை ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருக்கிறார். ‘கபாலி’ படத்தின் நெருப்பு டா பாடலுக்கு பிறகு இவர் எழுதிய பாடல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜமுனா பாரி’, ‘பீட்டல்’, ‘பார்பாரி’, ‘தெல்லிச்சேரி’, ‘பெராரி’ என எல்லா ரக ஆடுகளின் பெயர்களையும் இந்த பாடல் உள்ளடக்கி இருப்பது தனிச் சிறப்பு. அதுமட்டுன்றி, இந்த பாடலுக்காக ஆடுகளின் குரலை பிரத்தியேகமாக பதிவு செய்திருக்கிறார் ‘மரகத நாணயம்’ படத்தின் இசையமைப்பாளர் திபு. குறுகிய காலத்தில், துரித வேகத்தில் தயாராகி வரும் இந்த ‘மரகத நாணயம்’ படமானது, திரை வர்த்தகத்தினரை பெருமளவில் கவர்ந்து இருக்கிறது.