ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு. இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் வருகிறது. மிகச் சிறப்பாக கார் ஓட்டும் வசுந்தராவுக்கு உண்மையில் பைக் ஓட்டத் தெரியாதாம். இதற்காக அவருக்கென படக்குழுவினர் பல நாட்கள் பைக் ஓட்டக் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டார் வசுந்தரா. அதன்பின் பைக் ஓட்டும் காட்சியில் மிகவும் துணிச்சலாக வேகமாக பைக் ஓட்டி நடித்திருக்கிறார். பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டியிருக்கிறார். அவரது துணிச்சலை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் அவரை பாராட்டினர்.படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் புத்தன் இயேசு காந்தி’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.