மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிர்ந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகிறது. இதற்காக களமிறங்கிய பல்வேறு தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:
ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருந்த மனிதத்தன்மை இந்த பெருமழை, வெள்ளத்தால் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம் வருவதற்கு முன்பே இந்த மனநிலையில் நாம் இருந்திருந்தால் இந்த மழை வந்தே இருக்காது.இயற்கை சீற்றங்கள் எல்லாம் இறைவானால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை. இயற்கை இறைவனின் வேலையாள். இறைவன்தான் மனிதர்களின் மனதை பண்படுத்தி விட்டு வா என்று மழையை அனுப்பி வைத்திருக்கிறார். இறைவனின் அந்த தண்டனையை இயற்கை நமக்கு கொடுத்து அதன் மூலம் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது.
எப்போதுமே உணர்வுகள்தான் உண்மையானது. நான் அதிகமாக பொது இடங்களில் இருப்பதை தவிர்த்து விடுவேன்.நான் ஏன் இந்தசகதி, வெள்ளத்தில் சென்று மக்களை சந்தித்தேன் என்று தெரியவில்லை. அதற்கு எனக்குள் இருக்கு உணர்வுகள் தான் காரணம்.இந்த மழை கற்றுக் கொடுத்த பாடத்தைக் கொண்டு அடுத்தமழையை நாம் எதிர் கொண்டு விடலாம் என நினைத்து விடவேண்டாம். சுனாமியின் போது எழுந்த பல விஷயங்கள் இந்தமழைக்கு உதவவில்லை.இந்த நொடியில் நடக்கும் எந்த நிகழ்வையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. அடுத்த மழையை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற திறன்மட்டுமே இந்த மழை நமக்கு தந்துள்ளது. மழை,வெள்ளத்தால் நாம் இழந்ததை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது என்றார் இளையராஜா.