மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி ‘கத்துக்குட்டி’ படக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது:
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எங்களுடைய ‘கத்துக்குட்டி’ படம். 691 சதுர கி.மீ. விவசாய நிலத்தைக் காவு வாங்கி, வாழவாதாரத்தையே நிர்மூலமாக்கக்கூடிய மீத்தேன் திட்டத்தை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட உலகத்தின் பன்னாடுகளும் தடை செய்திருக்கும் நிலையில், தஞ்சை மண்ணில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவர அதிகார வர்க்கம் துடிப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் ‘கத்துக்குட்டி’ படம் அப்பட்டமாக்கியது. வாழ்வாதாரங்களும் பாரம்பரியப் பெருமைகளும் மீத்தேன் திட்டத்தால் அழிந்துபோகும் அபாயத்தை கிராபிக்ஸ் காட்சிகளால் பதைபதைக்கும் விதமாக ‘கத்துக்குட்டி’ படத்தில் சொல்லியிருந்தோம். கடந்த 9-ம் தேதி வெளியான எங்களின் ‘கத்துக்குட்டி’ படம், தமிழகம் முழுக்க மீத்தேன் குறித்த விழிப்பு உணர்வையும், விவசாயத்தைக் காக்கும் போராட்டத்தையும் மக்களிடத்தில் பெரிதாக ஏற்படுத்தியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமாகத் தொடங்கின. அரசு ஊழியர்களும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பது விவசாய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. ஊருக்கே படியளக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணில் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவரத் துடித்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, விரட்டி அடித்திருக்கிறது. அதோடு மட்டும் அல்லாமல், காவிரி படுகைப் பகுதிகளில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பது ஒவ்வொரு விவசாயியையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது.
மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எங்கள் ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீத்தேன் திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து மக்களின் மனசாட்சியாக நின்று அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. நினைத்துப் பாரக்க முடியாத பேரபாயத்தில் இருந்து விவசாய மண்ணை மீட்டிருக்கும் தமிழக முதல்வர், காலத்துக்கும் மீத்தேன் அரக்கன் தஞ்சை மண்ணில் கால் வைத்துவிடாதபடி தடுத்து எதிர்காலத்திலும் விவசாய மக்களின் அரணாக விளங்க வேண்டும். விவசாய மக்களின் சார்பாகவும், மீத்தேன் எதிர்ப்புக் குழு சார்பாகவும், திரைத்துறை சார்பாகவும் தமிழக முதல்வருக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு காலத்துக்குமான நன்றியைச் சொல்லிக் கொள்கிறது. 240-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீத்தேன் கொடுரத்தைக் காட்சிப்படுத்தும் ஆவணமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்துக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கைத்தட்டலும், மீத்தேனுக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருக்கும் முதல்வரையே சென்று சேரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்து உள்ளார்.