ராம்பாபு புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் ‘எம்.பி. பாபு’ தயாரிக்கும் படம் “முடிஞ்சா இவன புடி”. கே.எஸ். ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் ஏற்கனவே ‘நான் ஈ’ படத்தில் நடித்துள்ள சுதீப், இப்போது ‘புலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் “முடிஞ்சா இவன புடி” படம்தான். இந்தப் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.‘போக்கிரி’, ‘பூஜை’ படங்களில் நடித்த முகேஷ் திவாரி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்த சரத் லோஹித்சுவா மற்றொரு வில்லனாக நடிக்கிறார். மற்றும் நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார், லதா ராவ், சிக்கன்னா, சதிஷ், சது கோகிலா, தபலா நானி, வீனா சுந்தர், சங்கீதா, இமான் அண்ணாச்சி, கௌதமி, விச்சு, இயக்குநர் ரங்கநாதன், பரத் கல்யாண், சேட்டன், ராம், பிரசன்னா, பிரவீண், வரதன், மாஸ்டர் துருவ் என “முடிஞ்சா இவன புடி” படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது.“முடிஞ்சா இவன புடி” படத்தின் துவக்கவிழாவுடன் முதல் கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் நடைப்பெற்று முடிவடைந்தது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. சென்னை அம்பத்தூரில் போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் செட் பல லட்சம் செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அங்கே 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு நடைபெற்ற படப்பிடிப்பில் சுதீப், நித்யா மேனன், நாசர் மற்றும் ஏராளமான துணை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.