ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் .
“இது ஒரு பேய்ப் படம்தான். ஆனால் வழக்கமான பேய்ப் படங்களில் எல்லாம் ஒரு பங்களா அல்லது வீட்டுக்குள் பேய் இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு பிரச்னை வரும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்டுக்குள் எங்கே இருந்து எப்போது வேண்டுமானாலும் பேய் வரும். நீங்க தப்பிக்கவே முடியாது ” என்கிறார் இயக்குனர் மணி ஷர்மா
அப்படி என்ன கதை ?
“வனவியல் புகைப்படக்கார இளைஞர் ஒருவர் , காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்குள் தங்கி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் . ஆறு மணி நேரத்துக்குள் அந்தக் காட்டைக் கடந்து அவர் வரவேண்டும். ஆனால் மூன்று நாட்கள் ஆகிறது . அதிலும் ஒரு இரவு என்பது முக்கியமானது .
அடர்ந்த காட்டில் தரையே வீடாகவும் வானமே கூரையாகவும் உள்ள சூழலில் அந்த இரவில் பேயிடம் சிக்கும் அந்த புகைப்படக்காரருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் கதை” என்கிறார் அவரே .
தொடர்ந்து பேசும்போது “பொதுவாக இப்போது பேய்ப் படம் என்றால் அதை காமெடி கலந்து எடுப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது . ஆனால் இது முழுக்க முழுக்க சீரியசான பேய்ப் படம் . காமெடியும் இருந்தாலும் திகில்தான் இந்தப் படத்தின் பலம் .
விஷாகா சிங் நாயகியாகவும் பேயாகவும் நடிக்கிறார் . நாயகனின் மனைவியாக — இன்னொரு கதாநாயகியாக மீனாக்ஷி தீட்ஷித் நடிக்கிறார் .
அண்மைக் காலமாக காமெடி கேரக்டரில் அதிகம் நடித்து வந்த நடிகை ஊர்வசி இந்தப் படத்தில் விசாகாவின் அம்மாவாக ஒரு சீரியசான கேரக்டரில் நெகிழ்ச்சியூட்டும்படி நடித்துள்ளார். அவரது கணவராக ஜான் விஜய் நடிக்கிறார் . படத்தின் வில்லன் இவர்தான் .
நாயகனின் நண்பனாக முனீஸ்காந்த் நடிக்க , மற்றும் சிங்கம் புலி , யோகிபாபு போன்றோரும் நடிக்கிறார்கள்” என்கிறார் .உற்சாகமாக
” படத்தில் நான்கு இனிமையான பாடல்கள் இருக்கிறது . படத்தின் பெரும்பகுதியை மூணாறு காட்டுப் பகுதியில் அடர்ந்த காட்டில் இரவிலேயே எடுத்தோம் . அதுவும் அட்டைக் கடிக்கு பயந்தபடி . அதுவே எங்களுக்கு ஒரு திகில் அனுபவமாக இருந்தது.
ஆனால் படத்தில் இந்த இரவு நேர வன காட்சிகள் ரசிகர்களுக்கு இதுவரை உணர்ந்திராத அனுபவத்தைத் தரும் .”என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் துரையும் சண்முகமும் .