கன்னா பின்னா இசைவெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.
திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.
இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.. நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலைப்புலி தாணு கலந்துகொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார்., அவருடன் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் & தயாரிப்பாளர் விஜயமுரளி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்..
“திருட்டு சிடியில் படம் பார்த்தால் கைகள் உடைக்கப்படும் : விற்றால் கடைகள் கொளுத்தப்படும்” ஜாக்குவார் தங்கம் ஆவேசம்..!
இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழக்கம்போல திருட்டு விசிடியை ஒழிக்கவேண்டும் என குரல் கொடுத்தவர் “திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றால் கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக முழங்கினார். அதன்பின் பேசிய இயக்குனர்கள் மூவரின் பேச்சிலும் இது குறித்த மூன்றுவிதமான பார்வை காட்டமாகவும் கண்ணியமாகவும் வெளிப்பட்டது.
“இலங்கை தமிழர்கள் தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்” ; சேரன் தாக்கு..!
“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” ; சேரன் குமுறல்..!
இயக்குனர் சேரன் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சிவா, நான் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு ஜிம்மில் ட்ரெய்னிங் கொடுத்தவர்.. இந்தப்படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் நடிகராகவும் மாறி இருக்கிறார். என்னோட ராசி என்னவென்றால், எனக்கு ஜிம் ட்ரெய்னிங் கொடுத்தவர்கள் எல்லோரும் ஹீரோவாக ஆகிவிடுகிறார்கள்.. நடிகர் ஆரி எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தவர் தான். இப்போ ஹீரோ ஆகிவிட்டார். அதேபோலத்தான் இவரும். நடிகராகிவிட்டார்.
‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது. கபாலி மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.. ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு. நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார் சேரன்.
“நான் உண்மை பேசினால் தாங்க மாட்டாங்க” ; தங்கர் பச்சான் தடாலடி..!
“நிறைய சண்டை காட்சி இருக்கிற படம் தான் எனக்கு பிடிக்கும்” ; தங்கர் பச்சானின் புதியமுகம்..!
இயக்குனர் தங்கர் பச்சான் பேசும்போது, “இந்த விழாவில் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்குறீங்க.. இந்த மகிழ்ச்சி நிலைக்கணும்னா சினிமா தழைக்கனும்.. சினிமா தழைக்கனும்னா முதலீடு போடுறவன் சிரிக்கணும்.. இங்க முதலீடு போடுகிறவனை தவிர மற்ற அனைவரும் சிரிப்பதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது.. இங்கு பல குமுறல்கள் வெளிப்படும்.. குமுறல்களை சொல்லவேண்டிய மேடைதான் இது..
நூறு பேர் படம் எடுத்தால் 99 பேர் பணத்தை இழக்கும் நிலைதான் இங்கே உள்ளது.. அதை மாற்றணும்.. மாற்ற முடியாதது அல்ல அது. ஆனால் மாற்றவேண்டியவங்க அதை மாற்றணும். நிச்சயமா செய்ய முடியாத விஷயமில்ல இது.. நான் இந்த மாதிரி சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை.. ஏன்னா நான் சில உண்மைகளை பேசவேண்டி இருக்கும்.. ஆனால் நான் உண்மை பேசினா தாங்கமாட்டங்க அது நிறைய பேருக்கு பாதிப்பை உண்டாக்கும்..
எனக்கு பிடித்தமாதிரி நான் எடுக்குற படங்களை நான் பார்க்கிறதில்லை.. நிறைய சண்டை காட்சி, நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கிற படம் தான் எனக்கு பிடிக்கும். ஏன்னா படம் பொழுதுபோக்கா இருக்கணும்.. அதேசமயம் நாம சொல்ல வர்ற விஷயத்தை ஆணித்தரமா சொல்லணும்.. நான் அது மாதிரி படங்களை எடுக்காம போனாக்கூட என்னால ரசிக்க முடியும்..
இந்தப்படம் நல்லா வரும்னு தெரியுது.. ஆனா நீங்கதான் கஷ்டப்படனும்.. ஏன்னா இந்தப்படத்தை யாரும் வாங்க மாட்டாங்க… நீங்கதான் இன்னும் கொஞ்சம் முதலீடு போட்டு படத்தை வெளியிடனும்.. அப்படி வெளியிட்டீங்கன்னா, வெற்றி பெற்றீங்கன்னா அந்த லாபத்தை பிடுங்கிக்கொண்டு போகிறதுக்கும் சிலர் காத்திருக்காங்க. அதிலிருந்தெல்லாம் கவனமாக நீங்கள் மீண்டு வந்து தொடர்ந்து படங்கள் தயாரிக்கவேண்டும்” என பேசினார்.
“நல்ல படமா எடுங்க” ; கன்னா பின்னா’ விழாவில் பாக்யராஜ்..!
“தயாரிப்பாளரை விட முதலில் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” ; இயக்குனர்களுக்கு பாக்யராஜ் அறிவுரை..!
“நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி-காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது” ; கே.பாக்யராஜ் சவால்..!
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்.. அது அவர்களின் வயிற்றுப்பிழைப்பு என்பதால் அந்த திருட்டுத்தொழிலை செய்பவன் செய்துகொண்டு தான் இருக்கிறான்..
இதில் மக்களையும் நாம் குறைசொல்ல முடியாது.. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப்பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள். பஸ்ஸில் ஏறும் ஜனங்கள் அதுக்காக கண்ணை மூடிக்கொண்டு போவார்களா என்ன..? அதேபோல கேபிளில் போடும்போது பார்க்காமல் இருப்பார்களா என்ன..?
அதனால் இப்படி திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும் விற்பவர்களையும் நாம் ஒன்றும் பண முடியாது.. ஆனால் மக்கள் ரசிக்கும் விதமாக நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.. லாபமும் உறுதி.. இப்போது வெளியான ஜோக்கர் படம் கூட பெரிய நடிகர்கள் பட்டாளம் இல்லை தான். ஆனால் அரசியலை நையாண்டி செய்யும் படம் என மவுத் டாக்கின் மூலம் செய்தி பரவியதால் மக்கள் தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். ரஜினி உட்பட பலரும் படத்தை பாராட்டியுள்ளார்கள். நானும் கூட இப்படி ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் தேடிப்போய் பார்த்தேன்.. ஆக நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது..
இன்று படம் இயக்குனர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவுசெய்து தயாரிப்பாளரை காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள். முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள்.. தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார். ஆனால் நீங்கள் கோட்டைவிட்டால் ஒரு படத்தோடு அவ்வளவுதான். உங்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது கேள்விக்குறிதான். அதனால் முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக நல்ல தரமான படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்.
அதனால் தான் நான் என் படங்களின் கதை விவாதத்தின்போது தயாரிப்பளர்களை உள்ளே அனுமதிக்கவே மாட்டேன். கதையில் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.. இதற்காகவே ஆரம்பத்தில் காஸ்ட்யூமர், மேக் அப் மேன், லைட்மேன் என சினிமாவில் உள்ள டெக்னீசியன்களை தயாரிப்பாளர்களாக மாற்றி படம் எடுத்தேன்.. அப்போது நிறைய பேர் “என்ன இது பாக்யராஜ் இப்படி வேலை பார்க்குற ஆளுங்களை எல்லாம் தயாரிப்பாளரா மாத்திட்டு இருக்கான்னு எம்மேல வருத்தம் கூட பட்டாங்க.. நான் முதன் முதலில் கதை சொன்ன பெரிய கம்பெனி என்றால் அது ஏவி.எம் நிறுவனம் தான்”
என இளையதலைமுறை இயக்குனர்களுக்கு ஆலோசனையும் கூறினார் பாக்யராஜ்.