சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து அவர் நடிக்கும் அடுத்த படம் என்பதால் இன்னமும் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது இந்தப் படம்.
மோகன் ராஜாவின் அடுத்த படம் இவருடனா, அவருடனா என்று திரை உலகமும் , ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகையில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, எதிர்பார்ப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்லப்படுகிறது.
‘எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை.இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.இதுவே ஒரு சிறந்த இயக்குனருக்கு தர சான்றிதழ் என சொல்லலாம்.குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும் , வந்த ரசிகர்களை திருப்தி படுத்துவதிலும் அவருக்கென்று ஒரு தனி தன்மை உண்டு.ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS நிறுவனமும், நாயகனாக சிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் ‘ என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா.