.
.

.

Latest Update

லிங்கா பட விவகாரம் வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை


லிங்கா படத்தை வாங்கியவர்களுக்கு 12.5 கோடியை ரஜினி திருப்பிக் கொடுத்தும் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.
பணத்தைப் பிரித்துக் கொள்வதில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையில் ஆரம்பித்த சண்டை இன்னும் தீர்ந்தபாடில்லை.
உரிய நேரத்தில் பணம் கைக்கு வராததினால் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
அப்படியும் பங்கு பிரிப்பு சுமுகமாக நடக்கவில்லை.
ரஜினி கொடுத்த பணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தானே ஏப்பம்விடத் துடிக்கும் சிலரால் பிரச்சனை முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
இந்தப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண முன்வந்த திருப்பூர் வினியோகஸ்தர் சுப்ரமணியம் மீது புகார் வாசித்திருந்தார்கள் சில வினியோகஸ்தர்கள்.
அவர்களின் புகாருக்கு வேந்தர் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.மதன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனமாகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும், பாசமும், மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவிஸ் என்று பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈராஸ் நிறுவனத்திடமிருந்து லிங்கா திரைப்படத்தை 67 கோடி ரூபாய்க்கு நான் வாங்கினேன். உடனே இப்படத்தை விநியோகஸ்தர்கள் அனைவரும் பலத்த சிபாரிசுகளுடன் வந்து எங்களை வற்புறுத்தி NRA(Non Refundable Agreement) முறையில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள்.
அவ்வாறு வாங்கியதில் கோவை, சேலம் ஆகிய பகுதிகளின் விநியோகஸ்தர்களைத் தவிர மற்றவர்கள் 3 கோடியே 30 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டார்கள். நான் அதையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் படத்தை வெளியிட அனுமதியளித்தேன்.
ஆனால் இவர்கள் படம் வெளியான ஐந்தாவது நாளே படத்தைப் பற்றி மிக மோசமாக, ரஜினி சாரைப் பற்றி இழிவாக ஊடகங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் படத்தின் வசூல் பலமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக செய்திகளின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருப்பதால் நான் நேரடியாக வெளியிட்ட சென்னை நகர வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அதில் மட்டும் எனக்கு நான்கே கால் கோடி ரூபாய் நஷ்டமானது.
விநியோகஸ்தர்களின் தரக்குறைவான நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும், அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி பல முறை நான் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நான்கு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நானே ரஜினிகாந்த் சாரிடம் பேசி தகுந்த இழப்பீட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதையும் அவர்கள் கேட்கவில்லை.
மாறாக உண்ணாவிரதப் போராட்டம், பிச்சையெடுக்கும் போராட்டம், கீழ்த்தரமான அறிக்கைகள் என்று தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டேயிருந்தார்கள். ஒருவேளை, நான் சொன்னதைக் கேட்டு ஒழுங்காக நடந்திருந்தால் ரஜினி சார் அவர்கள் இன்னும் பெரிய அளவில் உதவி செய்திருப்பார். ஆனால் இவர்களையெல்லாம் மன்னித்து பெரிய மனதோடும், அன்போடும், ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து ஒரு பெரிய தொகையைக் கொடுத்துள்ளார்கள்.
இதை ரஜினி சார் அவர்களின் அழைப்பின் பேரில், கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் ஆகியோர் மேற்படி பணத்தை சரியான முறையில் விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுக்க முன் வந்தனர். அதற்காக சரியான ஒரு தீர்வையும் கொடுத்தனர்.
ஆனால் விநியோகஸ்தர்களில் நான்கு பேர் மட்டும் அவர்களை மதிக்காமல், எங்கள் நான்கு பேருக்கும் மட்டும் இவ்வளவு தொகை வேண்டும் என்று வழக்கமான பிளாக்மெயில் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ‘லிங்கா’ படத்தைத் திட்டி, ரஜினி சாரை திட்டி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை திட்டி, வேந்தர் மூவிஸை திட்டி அறிக்கைவிட்டவர்கள் தற்போது ரஜினி சாரின் அழைப்பின்பேரில் செட்டில்மெண்ட்டில் கலந்து கொண்டுள்ள மூத்த விநியோகஸ்தரும், கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியத்தைத் திட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏன் என்றால் இந்தப் பணியை அவரைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டது ரஜினிகாந்த் அவர்களும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களும்தான். மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையையும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் திருப்பூர் சுப்ரமணியத்திடம்தான் கொடுத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிமேல் இதுபோல் அறிக்கை வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.
இதுநாள்வரை பரபரப்பான அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் இப்போது மெளனமாக இருப்பது ஏன்..?
மற்ற விநியோகஸ்தர்களுக்கு துரோகம் செய்துவிட்டு தான் மட்டும் தனியாக வாங்கிக் கொண்டுவிட்டாரா..?
அப்படியென்றால் வாங்கிய பணம் திரையரங்க உரிமையாளர்களுக்குத் தரப்படாமல் எங்கே போனது..?
இது மட்டும் போதாது என்று போராட்டம் நடத்திய செலவுக்கான பணத்தையும், வழக்கு நடத்திய செலவுக்கான பணத்தையும் தனக்குத் தனியாக கொடுத்தாக வேண்டுமென்று மிரட்டி வருகிறார் சிங்காரவேலன்.
இந்த மோசடி விநியோகஸ்தர்கள் மீதும் எனக்கு ஒப்பந்தப்படி பணம் தராமல் ஏமாற்றிய விநியோகஸ்தர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளேன்.
எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ரஜினிகாந்த் அவர்கள் தந்திருக்கும் பணத்தை சரியான அளவில் எல்லாருக்கும் ஒரே அளவு சரிவிகிதத்தில் பிரித்துத் தர வேண்டும்.
அதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்கி இதை சுமூகமாகவும், நியாயமாகவும் முடித்துக் கொடுக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் தியேட்டர் டெபாசிட் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு அந்தந்த ஏரியா விநியோகஸ்தர்களே முழு பொறுப்பினை ஏற்க வேண்டும்.
கீழ்த்தரமான அறிக்கைகள் தருவதை நிறுத்திவிட்டு, பிளாக்மெயில் செய்யும் கலாச்சாரத்தை அடியோடு கைவிட்டுவிட்டு, நியாயமான பாதைக்கு வர வேண்டுமென விநியோகஸ்தர்களை கேட்டுக் கொள்கிறேன்..”
இவ்வாறு தயாரிப்பாளர் எஸ். மதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles