ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தில் ‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்
பிறர் மனதை புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உண்மையான சிறப்பம்சம்…அத்தகைய உயர்ந்த குணமான நகைச்சுவைக்கே புத்துயிர் அளித்து, புதியதொரு வடிவத்தை கொடுத்தவர் ‘வைகை புயல்’ வடிவேலு. ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு, தற்போது ஜி வி பிரகாஷ் நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். ‘தில்லுக்கு துட்டு’ புகழ் ராம்பாலா இயக்கி வரும் இந்த நகைச்சுவை திரைப்படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் தயாரித்து வருகிறார் ஸ்டீபன்.
“என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், அவருடைய செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். இந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்பாலா கூறும் பொழுதே, வடிவேலு சார் மட்டும் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பதை நானும், தயாரிப்பாளர் ஸ்டீபனும் முடிவு செய்துவிட்டோம். நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு சாரோடு நாங்கள் கைக்கோர்த்து இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது. மதுரை மாவட்டத்தின் ‘வைகை புயல்’ தற்போது மீண்டும் புத்தம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது…. ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க தயாராக இருங்கள்…” என்று ‘வைகை புயல்’ வடிவேலுவை பற்றி மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் ஜி வி பிரகாஷ்.