.
.

.

Latest Update

ஸ்ருதிஹாசன் நடிக்க தடை


நடிகையான ஸ்ருதிஹாசனை வேறு யாரும் தங்களுடைய படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ஹைதரபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனம் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பி.வி.பி. நிறுவனம் செய்தியறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “சென்னையிலும், ஹைதராபாத்திலும் இயங்கிவரும் பெரிய நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியாலி மிட்டட் (PVP Cinema), நடிகை ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் & சிவில்(Criminal & Civil) வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் மிகப் பெரிய பொருட்செலவில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் திரு.கார்த்திக், திரு.நாகர்ஜுனா நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்புதல் அளித்து எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஸ்ருதிஹாசன் அளித்திருந்த தேதிகளின்படிதான் மற்ற நடிக்ர்களிடமும் அந்தந்த தேதிகளைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் வாங்கியிருந்தோம்.
இந்த ஒப்பந்தத்தின்படி இப்போது பாதி படம் முடிவடைந்த நிலையில் தன்னால் இப்படத்திற்கு கொடுக்க தேதி இல்லை, அதனால் தன்னால் நடிக்க இயலாது என்று ஒரு மின்னஞ்சலை(E-Mail) எங்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால், எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகள் வீணாகிவிட்டது.

இவருடைய இந்த செயலால் எங்களுக்கு மிகப் பெரிய பணம் இழப்பு மட்டுமில்லாமல், நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்த நடவடிக்கை திரையுலகில் மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இந்தப் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலினால் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் எங்களுடைய பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்(PVP Cinema) நிறுவனம் நடிகை ஸ்ருதிஹாசன் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிவில் & கிரிமினல்(Criminal & Civil) வழக்காக இதனைப் பதிவு செய்துள்ளது.

இதை நீதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டு, இனி நடிகை ஸ்ருதிஹாசனை, அடுத்த தீர்ப்பு வரும்வரையில் எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யக் கூடாதென்று இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்தக் கிரிமினல்(Criminal) குற்றத்திற்காக அவரிடம் விசாரணை நடத்தும்படி காவல் துறைக்கும் ஆணை பிறப்பித்துள்ளார்..” என்று கூறப்பட்டுள்ளது.

பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட அறிவிப்பு சென்ற ஆண்டு அக்டோபர் மாதமே வெளியானது. கார்த்தி, நாகார்ஜூனாவை புக் செய்த பிவிபி ஹீரோயினுக்காக மிகுந்த தேடுதல் வேட்டையை நடத்தியது. தெலுங்குலகின் ஹாட்டஸ்ட் நடிகைகள் பலரின் தேதிகள் ஒத்து வராத்தால் ஒவ்வொருவராக கழிக்கப்பட்டு கடைசியாகத்தான் ஸ்ருதிஹாசன் ஒத்துக் கொண்டார். அதுவும் கார்த்திக்கு முன்பாக அந்த வேடத்தில் நடிக்கவிருந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் படத்திலிருந்து விலகிய பின்பே..!

இந்தப் புதிய படத்தின் தெலுங்குலக பூஜை கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகை அமலா கிளாப்ஸ் அடித்து இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார். இந்த துவக்க விழாவில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை. ஸ்ருதியின் தேதிகள் உடனே கிடைக்காததால் அவர் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த மார்ச் 15-ம் தேதி சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக ஒரு தனி பூஜையை நடத்தியது பிவிபி நிறுவனம். இந்த பூஜை நிகழ்ச்சியிலும் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் டிவிட்டரில் தான் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டார் ஸ்ருதி. என்ன காரணம் என்று தெரியாததால் இதெல்லாம் இவங்க நடிப்பு கேரியர்ல சகஜம்தானே என்று எண்ணியிருந்தோம்.

பொதுவாக இது போன்று பெரிய நடிகைகள் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு நடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டுப் போவது வழக்கம்தான். அதற்கு ஏதேனும் காரணங்கள் நிச்சயமாக இருக்கும். சொல்வதும், சொல்லாததும் அவர்களைப் பொறுத்தது.

தயாரிப்பு நிறுவனங்கள் இதை ஏற்கவில்லையெனில் முதலில் சங்கங்களிடம் புகார் சொல்லி சம்பந்தப்பட்டவர்களை இழுத்துவைத்து பேச வைப்பார்கள். அதுவும் முடியாதபட்சத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டு காசை வெட்டி முறித்துவிட்டுப் போவார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இப்படி கோர்ட்டிற்கெல்லாம் போக மாட்டார்கள்.

ஆனால் பி.வி.பி. நிறுவனம் இப்படி துவக்கத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. மிகப் பெரிய பணக்கார நிறுவனம். கல்குவாரி, கிரானைட் பிஸினஸ் என்று கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம். சினிமாக்காரர்களை நம்பி இவர்கள் இல்லை என்பதால் அவர்களின் முகதாட்சண்யம் தங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles