.
.

.

Latest Update

உலக ‘பிரமாண்டத்தின் உச்சம்’ “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி எப்படி பாராட்டுவது……


Bahubali Tamil Trailer Launch Pics (17) ‘பாகுபலி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் அதன் இயக்குநர் ராஜமெளலி பேசும்போது தான் சென்னையின் மைந்தன் என்பதை சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்.

“மும்பை உள்ளிட்ட பல ஊர்களில் மேடை ஏறி பேசியிருக்கிறேன். ஆனால், சென்னையில் பேசும்போது மட்டும்தான் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். ஏனென்றால், நான் பிறந்தது, படித்தது, சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது எல்லாமே இந்த மண்ணில்தான். என்னை சினிமாக்காரனாக உருவாக்கியது சென்னைதான். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

இந்த மாதிரி படம் பண்றது பல இயக்குநர்களுக்கு ஒரு கனவு மாதிரி. ஆனால், இந்தப் படம் எனக்கு கனவு கிடையாது. நான் இந்த உலகத்துலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

எங்க அப்பா என்னை லைப்ரரில சேர்த்தபோது, நான் அதிகமா அங்க படிச்சது அமர்சித்ரா கதைகளைத்தான். அந்த வயசுல எனக்கு அதுதான் ரொம்பவும் பிடிச்சிருந்தது. ஸ்கூலுக்குப் போயும் சக மாணவர்களிடம் அந்தக் கதைகளைத்தான் சொல்வேன். ஆனால், நான் இயக்குநரானதும் எனக்கு இந்த ராஜா ராணி கதைகள்.. கோட்டைகளை வைத்து படம் எடுக்கணும்னு ஆசை. அந்த மாதிரி கதைகளை தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னால், ‘வெளிய போடா’ன்னு சொல்வாங்க.

இதுக்கு முன்னாடி என்னோட சில படங்கள்ல 5, 6-வது படங்கள்ல 20 நிமிஷம், 40 நிமிஷம்னு சரித்திரக் கதைகளை செய்தேன். அந்தப் படங்கள் வெற்றியடைஞ்சதும் தயாரிப்பாளர்கள், ‘இந்த மாதிரி படம் எடுத்தால் மக்கள் பார்ப்பாங்க, நாம போடற பணம் திரும்ப வரும்’னு நினைச்சாங்க. அப்படித்தான் இந்தப் படமும் ஆரம்பிச்சது. ஆக, இந்தப் படம் நான் என்னோட முதல் வகுப்பு படிக்கும்போதே என்னை பிரமிக்க வைத்த ஒரு விஷயம்தான்.

இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள். பிரபாஸ், ராணா இவர்களின் உழைப்பு அபாரமானது. தமன்னா மாதிரியான ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அனுஷ்காவும் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

சத்யராஜ் ஸார் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. செட்டுக்குள்ளே வந்துவிட்டால் ‘டைரக்டர் எங்கே..?’ என்று கேட்டு என்னைத் தேடி வந்து பிடித்து ‘குட்மார்னிங்’ சொல்வார். அதேபோல் ஷூட்டிங் முடிஞ்சவுடனேயே ‘உங்க சீன் முடிஞ்சிருச்சு ஸார்.. நீங்க கிளம்பலாம்’னு சொல்லிட்டு அடுத்துக் காட்சிக்காக நான் வேறொரு பக்கம் போயிருப்பேன். இவர் பின்னாடியே என்னைத் தேடி வந்து ‘போயிட்டு வரேன் ஸார்’னு சொல்வார். ‘என்ன ஸார்.. நீங்களே இப்படி?’ன்னு வெட்கப்படுவேன். அவருடைய அந்தப் பண்பை நினைத்து இன்னைக்கும் எனக்கு ஆச்சரியமா இருக்கு.

தமிழ் மொழிக்காக எப்படிப்பட்ட வசனம் பேச வைக்கிறதுன்னு முதல்ல எங்களுக்குள்ள குழப்பம் இருந்தது. காரணம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் மொழி எப்படி பேசப்பட்டதுங்கிறதுக்கு ஆதாரம் இருக்கும். அதே மொழிநடையை இப்போது மக்களுக்கு புரியாது. இப்போதைய பேச்சு நடையில் பேசினால் விமர்சனங்கள் வருமேன்ற குழப்பமும் எங்களுக்கு இருந்தது. அதைத் தீர்த்து வைத்தது சத்யராஜும், நாசரும்தான். அதன் பிறகு மதன் கார்க்கி ஒரு காட்சிக்கு நான்கு மாதிரியான வசனங்களை எழுதிக் காண்பித்தார். அதிலிருந்து ஒரு வசன நடையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

சாபுசிரில், மரகதமணி, செந்தில், பீட்டர் ஹெய்ன், ஸ்ரீனிவாஸ் மோகன் என இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களை அனைவரையும் நிர்வகித்தது, நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரீவள்ளிதான்.

இந்தப் படத்தில் வேலை பார்த்த கலைஞர்களை எண்ணவே முடியாது. ஒரு சீன் எடுக்க புளுமேட் பின்னணியில்தான் படப்பிடிப்பு நடத்துவோம். ராமோஜிராவ் ஸ்டூடியோவின் திறந்த வெளியில் காத்து பலமாக வீசி அந்த புளுமேட்டை தூக்கியடிக்கும். அதை பின்னால் இருந்து பிடிக்க 40, 50 பேர் இருப்பாங்க. அப்போ அந்த காட்சி எடுக்க நடிகர்கள் மட்டுமில்ல.. இந்த 50 பேரின் ஒத்துழைப்பும் ஒரு காரணம்.

இந்தப் படத்துல எவ்வளவு பேர் உழைச்சிருக்காங்கன்னு எண்ணிக்கையில சொல்ல முடியாது. ஒரு காட்சியில் 2000 பாடி பில்டர்களை நடிக்க வைச்சேன். அந்த 2000 பாடி பில்டர்களை தினமும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்து, உடைகள் கொடுத்து, மேக்கப் போட்டு கேமிரா முன்னாடி நிற்க வைப்பதே ஒரு மிகப் பெரிய வேலை. போர்க் காட்சிகளைத்தான் மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கியிருக்கிறோம். அக்காட்சிகளுக்காக மட்டும் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்போது படத்தை எடுத்து முடித்துவிட்டோம். ஆனால் எப்படி முடித்தோம் என்று இப்போது யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ் ரசிகர்கள் அனைவருமே உங்களில் ஒருவனாக என்னை பார்த்து வருகிறார்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. பிறகு சிறிய இடைவெளியில் இரண்டாவது பாகம் வெளியாகும்..” என்றார்.

Bahubali Tamil Trailer Launch Pics (3)சத்யராஜ் பேசும்போது, “முதல்ல ஒரு விஷயம் சொல்லிடறேன். இந்த ‘பாகுபலி’ படம் டப்பிங் படம் அல்ல. நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு ஷாட்டையும் தமிழுக்கு ஒரு முறையும், தெலுங்குக்கு ஒரு முறையும் என்றுதான் எடுத்தோம்.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை பார்த்தாலே ஏதோ அணை கட்டும் வேலை நடக்கிற மாதிரி இருக்கும். அவ்வளவு கூட்டம்.. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்தார்கள்.

‘பிரமாண்டத்தின் உச்சம்’ என்று இந்தப் படத்தை சொல்லலாம். நிறைய பேர் ஹாலிவுட் படங்களைத்தான் பிரமாண்டம்ன்னு சொல்வாங்க.. ஆனால் இனிமே ஹாலிவுட்காரங்களே இந்தப் படத்தை ‘பிரமாண்டம்ன்னா இதுதான்’னு சொல்லப் போறாங்க. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வைச்சு வேலை வாங்கியிருக்கிறார் ராஜமெளலி.

இயக்குநர் ராஜமெளலி கடின உழைப்பாளி. ச்சும்மால்லாம் சொல்லலை. உண்மையாகவேதான்.. வேலை பார்த்துக்கிட்டிருப்பார். திடீர்ன்னு பார்த்தா வேறொரு இடத்துக்கு போயிக்கிட்டிருப்பார். செட்டில் ஒரு நிமிஷம்கூட ச்சும்மா இருக்க மாட்டார். நடந்துக்கிட்டே செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிட்டே போவார்..

இத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகள் படத்துல இருக்கோம். ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவிதமாக டீல் செஞ்சார் டைரக்டர். இந்தப் படத்தில் கடவுளைப் பார்த்து நான் பேசுவது போல ஒரு காட்சி இருக்கிறது. நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இது ராஜமௌலிக்கும் தெரியும். அதனால் இந்தக் காட்சியை படமாக்கும்போது என்னிடம், ‘ஸார்.. இப்போ உங்க முன்னாடி.. உங்களது தலைவர் எம்.ஜி.ஆர். திடீர்னு வந்தால் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க..? பேசுவீங்க..? அப்படி நினைச்சுட்டு இப்போ பேசுங்க’ன்னு சொன்னார். மனுஷன் இப்படித்தான் எல்லார்கிட்டேயும் டெக்னிக்கா பேசியே வேலை வாங்கியிருக்கார்..” என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles