1000 படங்களுக்கு இசை அமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்!
உலக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் துறையில் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்து வருகிறார்.
5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ள மேஸ்ட்ரோ இளையராஜா, விரைவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலா இயக்கும் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அந்தப் பட25 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் இளையராஜா.
உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. வெளியில் தெரிய வராத அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் அவற்றில் புதிய பரிமாணத்தை அனுபவிக்க முடியும் என இசை விற்பன்னர்கள் கூறி வருகின்றனர்.
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது.
இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர்.
இந்திய சினிமா என்றாலே, அது அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன்தான். இவர்களே இந்திய சினிமாவின் முகவரிகள். இவர்களன்றி இந்திய சினிமா பற்றி யாராலும் பேச முடியாது. இந்த மூன்று சிகரங்களும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது, இதுவே முதல்முறை. காரணம் இந்த மூவருக்கும் பொதுவான இசைஞானி இளையராஜா!
ரஜினிக்கும் கமலுக்கும் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்தவர் ராஜா. கமல் ஹாஸனின் அரிய குரலை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே மேதை இளையராஜாதான். அவ்வளவு ஏன்… ரஜினியின் குரலில் முதல் பாடலைப் பதிவு செய்த பெருமைக்குரியவரும் ராஜாதான். அட, ஸ்ரீதேவியை முதல் முறையாக பாட வைத்தவரும் இளையராஜாதான் (மூன்றாம் பிறை… முன்ன ஒரு காலத்துல…)
அமிதாப் பச்சனின் இணையற்ற குரலை பிட்லி சே… பாடலில் பயன்படுத்தி இன்று இந்தியாவையே மயங்க வைத்திருக்கிறார் இளையராஜா.
உலகில் சிம்பொனி என்ற இசை வடிவம், ஐரோப்பிய இசை மேதைகளுக்கே உரித்தானது என்று உலகமே நினைத்த நேரத்தில், வெகு அநாயாசமாக சிம்பொனி வடிவ இசையைத் தந்த மாபெரும் மேதை நமது இளையராஜா ஒருவரே!
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம், இளையராஜாவின் தூய ரசிகரான இயக்குநர் பால்கி. இளையராஜா இசையில் தான் உருவாக்கியுள்ள ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டை அப்படியே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றி, உலகையே அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.
தான் பிறந்த மண்ணையும், தமிழ் சினிமாவையும் தலை நிமிர வைத்த இசைஞானி இளையராஜா, இன்று (ஜனவரி 21, புதன்கிழமை) பிற்பகல் 12.35 மணிக்கு மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார் , அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஒட்டு மொத்த மீடியா சார்பில் ஒரு இதயப் பூர்வமான வரவேற்பைத் தரப்பட்டது . தனது ஆயிரம் பட சாதனை, அதற்காக பாலிவுட் நடத்திய பாராட்டு விழா ஆகியவை குறித்து மீடியாவுடன் பேசினார் நம் ராகதேவன்.
பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இணையதள செய்தியாளர்கள், பண்பலை தொகுப்பாளர்கள், சுதந்திர பத்திரிகையாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள்…. அனைவரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, நம் இசைஞானிக்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.