.
.

.

Latest Update

அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட போகும் அபாயம் ; ஆரி எச்சரிக்கை!



‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என உறுதியாக சொல்வேன்” என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது, ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குனரைப் பற்றி பேசும்போது, தயாரிப்பாளருக்கான இயக்குனர் என்று சொன்னாரே அதுதான் இந்த படத்தின் முதல் வெற்றி. பெரிய படங்களின் விழாக்களுக்கு செல்வதை விட, இதுபோன்ற சின்ன படங்களை கைதூக்கி விடுவதற்கு நான் தயாராக உள்ளேன். அதனால் என்னை எப்போதும் தாராளமாக அழைக்கலாம். எப்போதுமே சமூக வேலைகள் என சுற்றி வருவதால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையோ எனக் கேட்கும் அன்பான நண்பர்களுக்கு, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

‘ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொன்னார்கள். நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால் தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். இப்போது சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்..

இந்த படத்தை இயக்குவதற்கு டைரக்டர் போட்ட ரூட்டு மாதிரி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இனி பட ரிலீசுக்காக தியேட்டர்களுக்கு ரூட்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் இந்த சிறிய படங்களுக்கு, யார் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றால் மற்றவர்களெல்லாம் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும்.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு நடிகர் நடிக்கும் வெப் சீரியஸ் தொடருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே தங்களது திரைப்படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் செலவழிக்க தயாராக இருந்தும் கூட, அப்படி விளம்பரம் கொடுக்க கூடாது என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவை எல்லாம் இப்படி சினிமாவிற்கு ஊடுருவ ஆரம்பித்து விடும். இதனால் சிறிய படங்கள் மேலும் தற்கொலைக்கு நிகரான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சின்ன படங்கள் தியேட்டருக்கு வர முடியாத ஒரு அபாயகரமான சூழல் ஏற்படும்.

சினிமாவில் எல்லா இடங்களிலும் இரண்டு அணியாக இருக்கிறோம். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் அனைவரும் அறிந்தது தான்.. அதை சரி என சொல்லவில்லை. தற்போது விஷால் அந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடத்தில் விஷாலுக்கு நாம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தவறுக்கு தண்டனை கொடுப்பது மரபாக இருக்கலாம் ஆனால் அவர்களை தண்டிப்பதை விட, அவர்களை மன்னித்து அவர்களை அரவணைத்து செல்லலாம்.

அவர்களை ஒன்று சேர்த்து முடிவுகளை எடுக்க தவறினால் வரும் நாட்களில் படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய சங்கடங்களை சந்திக்க நேரிடும். நமது மொத்த சம்பாத்தியத்தையும் வெளியில் இருந்து வருபவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நமக்கான ஒரு ஆப், நமக்கான ஒரு வலைதளத்தை உருவாக்கி அதன்மூலம் புதிய வியாபார உத்திகளை கொண்டு வாருங்கள் என நான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்” என்றார் ஆரி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles