.
.

.

Latest Update

“இதுவும் இனப்படுகொலைதான்”இயக்குநர் வ. கெளதமன் கடும் கண்டனம்


kavuthamanதனது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் மட்டுமல்ல கோடான கோடி தமிழர்களின் மனம் கொந்தளித்துக் கிடக்கிறது. தொடர்ந்து ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அதிகார வர்க்கங்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நடந்ததை ஆராய்ந்து அறியும் போது, மனம் சொல்லமுடியாத வேதனையடைகிறது. பெரும் வரலாற்றுச் சுவடுகளை சுமந்து நிற்கும் ஆதிகிராமமான படைவீடு என்கிற ஊரில் மூன்று தமிழர்களும் இரும்பிலியில் ஒன்பது பேரும், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம் பட்டு என்கிற ஊரில் எட்டு தமிழர்களும் என இருபது பேரை ஆந்திரக் காவல்துறை காட்டில் வைத்து கைது செய்து ஒரு பேருந்தில் கடத்திச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதைச் செய்தும், நெருப்பால் சுட்டும், சுட்டுக் கொன்றப் பிறகே மீண்டும் காட்டில் கொண்டு வந்து போட்டு சண்டையிட்டுக் கொன்றதாக இவ்வுலகத்திற்கு அறிவித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய காட்டுமிரண்டித்தானம். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் இதற்கு என்ன வேறுபாடு இருக்கிறது.

திருவண்ணமலை சரகத்திலுள்ள செங்கத்தை தலைநகராகக் கொண்டு “நன்னன்” என்கிற மன்னன் ஜவ்வாது மலையை சீறும் சிறப்புமாக ஆண்டு வந்ததாகவும், அங்கு வாழ்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, ஆடு,மாடு, மான், குரங்குகள் யானைகள் அனைத்தும் கொண்டாட்டத்தோடு வாழ்ந்த தாகவும் சங்க இலக்கியமான “மலைபடுகடாம்” சான்றளிக்கிறது. ஆனால் இன்றோ.. அதே மண்ணில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கூட்டம் கூட்டமாகக் குரங்கினங்கள் செத்துக் கொண்டிருக்கிறது. படைவீடு மண்ணில் தண்ணீரில்லாமல் கிடக்கும் கிணற்றில் தூர்வாறுவதற்காக இறங்கிய ஆறு தமிழர்கள் கயிறு அறுந்து விழுந்தும், மண் சரிந்து விழுந்தும் செத்திருக்கிறார்கள். ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், விவசாயம் செய்ய வழியே இல்லாத அந்த மக்கள் வாழ இந்த அரசாங்கம் என்ன செய்தது?

வெட்டியவனை சுட்ட பாவிகள் – மரத்தை அறுத்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிற பண முதலைகளை என்ன செய்ய முடிந்தது. இந்த அகங்கார திமிரை, இந்த அத்துமீறிய படுகொலைகளைத் தமிழர்கள் இனியும் நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகள் இதுவரை சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த இரு இனங்களிடையே இது இனப்பகையை உருவாக்கி விடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது இறையாண்மையை ”பலி” வாங்கிவிடும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் அடுக்கு மாடி கட்டடம் இடி விழுந்து தரை மட்டமானது. அந்தக் கட்டட வேலையில் பணி புரிந்து பெரும்பாலானோர் ஆந்திரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள். இயற்கைச் சீற்றத்தில் இந்நிகழ்வு நடந்ததென்றாலும் தமிழகம் மனித நேயம் மற்று உறங்கிக் கிடக்கவில்லை. பதறியது தமிழக அரசு உரிய நிவாரணம் அளித்து இந்நிகழ்வு தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியது. ஆனால் தற்போது ஆந்திரத்தில் அப்படியான நிலையா உள்ளது. ஆந்திர முதல்வரின் மேற்பார்வையில் நடந்தேறிய நிகழ்வாக அவரது அறிக்கை செயல்பாடுகள் நமக்கு சான்றளிக்கிறது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, அதையும் கடந்த தமிழினப்பகையே வெளிப்படுகிறது.

மரணமடைந்த அப்பாவித்தமிழர்களை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அதற்கான ஓர் உண்மை அறியும் குழுவை நியமித்து, ஆந்திர- தமிழக அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். அந்த உண்மை அறியும் குழு, ஆந்திர அரசு மருத்துவப் பரிசோதனை செய்திருந்தாலும், இறந்தவர்களை மீண்டும் ஒரு முறை தமிழக அரசு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதோடு மட்டுமல்லாது இந்தக் கோர சம்பவத்திற்கு பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. கங்காராவ் மற்றும் இதில் பங்குக் கொண்ட அனைவரும் உடனே பதவி விலக வேண்டும். தவறினால் ஆந்திர அரசு அவர்களை பதவி நீக்கம் செய்து நீதிவிசாரணை தொடங்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு இருப்பத்தைந்து இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசும், ஆந்திர அரசை எதிர்ப்பார்க்காமல் ஒரு நீதியரசரை நியமித்து நீதி விசாரணை நடத்துவதோடு பத்து இலட்சம் நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். இந்நிகழ்வினை மிக உன்னிப்பாக கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படவில்லையென்றால் அல்லது வேடிக்கை பார்த்தால் இந்தியாவிற்குள்ளேயே தமிழர்களைக் கொல்ல உங்கள் ஆதரவும் இருப்பதாக நாங்கள் உறுதி செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
வ. கெளதமன்
நாள்: 8.4.2015
இடம்: சென்னை

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles