.
.

.

Latest Update

நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க மாட்டார்கள்: விவேக் கலகலப்பு


நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக கணவர் மட்டும் இருக்க வேண்டும் என்கிற நடிகைகள் காமெடியன் கூட மட்டும் நடிக்க மாட்டார்கள் என்று விவேக் கலகலப்பாகப் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு.

முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

IMG_0318விழாவில் விவேக் பேசும் போது ” மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல வேளையாக இந்த நேரம்வரை இந்தப்படத்தின் மீது யாரும் வழக்கு போடவில்லை..அதற்கு அவசியமில்லாத படம். ஏனென்றால் இது ஒரு குடும்பப் படம். எந்த சர்ச்சையும் இல்லாத படம்.
என் தலைமுடி இப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.இப்போது நான் கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ படத்தில் நடிக்கிறேன். அவரது அப்பாவாக வருகிறேன். தோற்றம் இப்படி இருக்க வேண்டும் என்றார்கள்.அதற்காக கலர் போடாத தலையுடன் போனேன்.இப்படியே இயல்பான தோற்றத்தில் போனேன். ஓகே என்றார்கள்.அதுதான் அப்படியே வந்திருக்கிறேன்.

இந்த ‘பாலக்காட்டு மாதவன்’படம் முதலில் பட்ஜெட் படம் போலத் தொடங்கி விரிவாகி செலவு அதிகமாகி பெரிய படமாகி விட்டது..

மலேசியாவில் இலவசமாக எடுக்கலாம் என்று அழைத்துப் போனார்கள்.ஆனால் பார்த்த இடங்களில் எல்லாம் கட்டணம் வசூலித்து விட்டார்கள். இதில் வரும் விலையுயர்ந்த கார்களுக்குக் கூட லட்சக் கணக்கில் வாடகை கொடுத்தோம். எனவே பட்ஜெட் அதிகமாகி செலவு பெரிதாகி விட்டது.
நான் இதில் பாடல் எழுதியிருக்கிறேன். நான் பரம்பரை ஆண்டி அல்ல. பஞ்சத்து ஆண்டி. படப்பிடிப்புக்கு அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் நான் எழுத வேண்டியதாகி விட்டது. அதை அனிருத் பாடியுள்ளார்.

இக்கால இளைஞர்களுக்கு மரியாதை தெரியவில்லை என்கிறார்கள். அவர்கள் அனிருத்தைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அவரைப் பார்க்க நான் வீட்டுக்குப் போனேன். பார்த்து பேசிவிட்டு திரும்பினேன். சார் என்று கூப்பிட்டபடி ஓடிவந்தார். அவர் கையில் என் செருப்புகள் இருந்தன. மறந்து விட்டீர்கள் சார் என்று கொண்டு வந்து கொடுத்தார். அவரது பண்பைப்பார்த்தீர்களா? ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது’ உயர்வு என்பது போல அவரது பண்பால்தான் இப்படி .அவர் இவ்வளவு உயரம் செல்ல முடிகிறது ஆனால் அவர் ஒரு நடுநிசி நாயகன்.இரவில்தான் வேலை பார்ப்பார்.

IMG_0452இந்த விழாவுக்கு பாடல் சிடியைப் பெற்றுக் கொள்ள சிவகார்த்திகேயனை அழைக்க விரும்பினேன். எனக்கு பல வித யோசனைகள். பிசியாக இருக்கிறாரே,வருவாரா மாட்டாரா என தயக்கம் இருந்தது.ஒரு குறுஞ்செய்திதான் அனுப்பினேன். உடனே போன் செய்தார். நான் உங்கள் பரம ரசிகன் நிச்சயம் வருகிறேன் என்று கூறினார்.சிவகார்த்திகேயனை இனி யாரும் அவர் போனை எடுக்க மாட்டார் என்று தப்பாக கூறாதீர்கள்.
படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். அவர் ஒரு சுரங்கம் போன்றவர். நாம்தான் தோண்டி நல்ல மெட்டுகளை எடுக்க வேண்டும்.ஸ்ரீகாந்த் தேவாவை அப்படியே விட்டால் இதுவே போதும் என்று விட்டு விடுவார்.நம்மை ஏமாற்றி விடுவார்.அவரிடம் நாம்தான் வேலை வாங்க வேண்டும்.

ஒரு காமெடியன் கூட ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குவார்கள். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள்; நடிக்கமாட்டார்கள்.

கதாநாயக நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி யெல்லாம் கொடுப்பார்கள். ஆனால்காமெடியே வாழ்க்கையாக உள்ள, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன் கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள்.

ஆனால் என் படத்தில் என் னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார் .அதற்காக சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல அவருடன் நடிக்கும் போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது.அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன். ஆனால் சோனியா அகர்வால் கூச்சப்பட வேண்டாம் கிள்ளுங்க நடிப்பு தானே என்றார்.தைரியம்கொடுத்தார்.’இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’ என்றார். அப்புறம் என்ன?அது போதாதா எனக்கு?
தமிழனுக்கு கோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன? பிறகு நானும் புகுந்து விளையாடி விட்டேன்.

திரையுலகில் மதிக்கத் தகுந்தவர்கள் கௌரவிக்க வேண்டியவர்கள் என்றால் அவர்கள் எழுத்தாளர்கள்தான். கௌரவப் படுத்த வேண்டியவர்கள், பணம் சம்பாதிக்க வேண்டியவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு உரிய கௌரவம் கிடைப்பதில்லை. குறைந்த சம்பளமே கிடைக்கிறது.

இதற்கு வசனம் எழுதியுள்ளவர் ராஜகோபால் .இது அவரது100 வது படம் என்றார். என் படம் அப்படி அமைந்ததில் மகிழ்ச்சி.கவுண்டமணி, செந்தில் போன்ற,என் போன்ற எவ்வளவோ பேருக்கு நகைச்சுவைப் பகுதிகளுக்கு எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் மூத்த நடிகை ஷீலா நடித்துள்ளார்.மனோபாலா, சிங்கமுத்து,நான் கடவுள் ராஜேந்திரன், இமான், பாண்டு, டி.பி.கஜேந்திரன் போன்ற பல அண்ணன்களும் நடித்து இருக்கிறார்கள்.இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்.” இவ்வாறு விவேக் பேசினார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” நான் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதற்கு காரணங்கள் இரண்டு உண்டு. முதலில் அந்தப் பாடல் பிடித்திருந்தது. இரண்டாவது விவேக் சார் எனக்குப் பிடித்தவர்.

நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார்யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர்வரை அந்தப் பாடல் சென்றடைந்தது. ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்த படி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். அந்த அன்புக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.”

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது.” விவேக் சாருக்கு நான் பள்ளிவயது பருவத்திலிருந்து பரம ரசிகன்.அவர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக் காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில் போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும் . அப்போது அவர் ஒரு காட்சியிலாவது கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா இல்லையே என் பேன். அவரது பாதிப்பு நிச்சயம் எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.அந்த அளவுக்கு என்னைப்பாதித்தவர் அவர்.

அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவரைப் போலவே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் மூட நம்பிக்கை இல்லை.

கல்லூரிக் காலங்களில் மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன் போலப்பார்ப்பார்கள்.அவர் மீது அவ்வளவு அபிமானம் வைத்து இருப்பார்கள். ‘குஷி’ படத்தில் அவர் ஓபனிங் காட்சியில் வந்த போது கைதட்டினார்கள்.திருச்சி ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.அப்போது அதில் நானும் ஒருவன். எப்படியும் என் காமெடிக்காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம் இருக்கும்.உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது.மான் கராத்தே’ படத்தில் வரும் அந்த ‘ரத்தி அக்னி ஹோத்ரி’ டின்பீர் வசனம் எல்லாம் பாராட்டப்படுகிறது.ஆனால் அது எப்போதோ அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான். அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ” இவ்வாறு சிவகார்த்தி கேயன் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு, படத்தை இயக்கிய எம். சந்திரமோஹன், ஒளிப்பதிவாளர் கே:எஸ். செல்வராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, நடிகைகள் சோனியா அகர்வால், ஷீலா, ஆர்த்தி, நடிகர்கள் சாமிநாதன், சிங்கமுத்து, கதைவசன கர்த்தா ராஜகோபால், நடன இயக்குநர் பாலாஜி ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக தயாரிப்பாளர் எஸ். சஜீவ் அனைவரையும் வரவேற்றார். விஜய்டிவி ஈரோடு மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles