.
.

.

Latest Update

விஷாலுக்கு கண்டனம் தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்


காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமையன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையத்தளம் ஒன்றை தொடங்கி அதற்கு 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப் போவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அவர்கள் கூறியிருக்கிறார்.

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் விஷால் இதனை தன்னிச்சையாகவே அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில்தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம்.

விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு, எங்களிடம் MG முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் நாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.

அவை வருமாறு :

2017 ஜூலை 1-ம் தேதியிலிருந்து GST சட்டம் இந்தியா முழுவதும் அமுலுக்கு வருகிறது. அனைத்து உறுப்பினர்களும் GST நம்பர் வாங்குவதற்கு நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆகவே வரும் ஜூலை 01-ம் தேதியிலிருந்து யாரெல்லாம் GST நம்பர் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் வியாபாரம் செய்வது என முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் கடந்த 11 ஆண்டுகளாக (2006 முதல்) உயர்த்தி வழங்கப்படாமல் பழைய கட்டணமே இருந்து வருகிறது. இன்றைய விலைவாசி உயர்வு, பராமரிப்பு செலவுகள், ஊழியர் சம்பள உயர்வு, மின் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் பல மடங்கு கூடிவிட்ட காரணத்தால் திரையரங்குகள் நடத்துவது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது தொழிலாளார்கள் ஊதியம், மின்சார கட்டணம், பராமரிப்பு செலவுகள் மிகவும் உயர்ந்து விட்டதால், திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போல உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளூர் தொலைக்காட்சியில் உடனடியாக புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்து எங்களை காத்து திரையரங்குகளையும் காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles