தமிழ் சினிமாவில் எல்லா ஹிரோக்களுக்கும் ரீலிலும், ரியலிலும் நண்பனாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்திருப்பவர் தான் ‘பரோட்டா’ சூரி. இல்லை இல்லை ‘புஷ்பா புருஷன்’ சூரி. பரோட்டா சூரியாக இருந்த என்னை ‘புஷ்பா புருஷன்’ சூரியாக மாற்றிய பெருமை என் இயக்குனர் எழில் சாரையே சேரும். அவருடைய சிஷ்யன் சுசீந்திரன் எனக்கு கொடுத்த பரோட்டா சூரி என்ற அடையாளத்தை, அவரின் குரு எழில் சாரே உடைத்து அதை விட பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்ததும், இரண்டுமே என் நண்பன் விஷ்ணு ஹீரோவாக நடித்த படங்கள் என்பது மேலும் சிறப்பு என மகிழ்ச்சியோடு ஆரம்பிக்கிறார் சூரி.
எழில் இயக்கத்தில் 5 வது முறையாக சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளேன். வழக்கமாக ஹீரோ பக்கத்தில் நண்பனாக இருக்கும் நான், இந்த படத்தில் கல்யாணம் என்ற காமெடி கலந்த வில்லத்தனமான கதாபாத்திரத்தில் உதயநிதிக்கு எதிரி. ரெஜினாவுடன் சேர்ந்து உண்டில்லனு பண்றது தான் என் கதாபாத்திரம், காமெடிக்கு உத்தரவாதம். ஹீரோவோட நண்பனா மத்தவங்கள கலாய்க்கிறது ரொம்ப ஈசி, ஆனா இந்த படத்துல வில்லனா நடிச்சு ஹீரோவையே கலாய்க்கணும். ரொம்ப கஷ்டப்பட்டு ரசிச்சு பண்ணியிருக்கேன்.
உதயநிதி சார் கூட என்னோட முதல் படம். அவர் குடும்பத்தை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தும் அவ்வளவு எளிமை. ஒழுக்கம், பணிவு மரியாதை, நேரம் தவறாமை, சின்சியாரிட்டி எல்லாம் அவர்கிட்ட தான் கத்துக்கணும். அவரோட தொடர்ந்து 3 படம் நடிச்சதுல ரொம்ப சந்தோஷமான அனுபவம். படத்தோட இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் இமான். இமான், எழில், யுகபாரதி கூட்டணின்னாலே ஹிட்டு தான். எழில் சாரோட முந்தைய படங்களை விட இது மிகப்பெரிய ஹிட் ஆகும் என அடித்து சொல்கிறார் தன்னம்பிக்கையோடு.